செய்திகள்
சித்தராமையா

நதிகள் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சித்தராமையா

Published On 2021-02-23 01:58 GMT   |   Update On 2021-02-23 01:58 GMT
காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு :

தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்திருந்தார். ரூ.14 ஆயிரதது 400 கோடி செலவில் இந்த நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கடலில் கலக்கும் உபரிநீரை வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள தென் மாவட்டங்களுக்கு திருப்பி விட இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், காவிரி நதி நீரை பயன்படுத்தி நதிகள் இணைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு, காவிரி நதியில் 45 டி.எம்.சி. தண்ணீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி கொண்டு நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. காவிரி தண்ணீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி இந்த திட்டத்தை தொடங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த சட்டவிரோதமாக திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், என்று தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசு காவிரி நதி நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி நதிகள் இணைக்கும் திட்டத்தை தொடங்கி இருப்பது குறித்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, சுப்ரீம் கோர்ட்டு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் இந்த நதிகள் இணைக்கும் திட்டத்தை கைவிடும்படி கோரி, தமிழக முதல்-அமைச்சருக்கு, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News