செய்திகள்
ஊட்டி கலெக்டர்

வாகனங்களுக்கு வரி விதிப்பு: பசுமையை பாதுகாக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் - கலெக்டர் தகவல்

Published On 2020-11-23 14:46 GMT   |   Update On 2020-11-23 14:46 GMT
வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி பசுமையை பாதுகாக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி:

மலைபிரதேசமான நீலகிரி மாவட்டம் சுற்றுலாத்தலமாக உள்ளதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் இங்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

நீலகிரி பசுமை நிறைந்த மாவட்டம் என்பதாலும், இயற்கை சூழல் நிறைந்த பகுதி என்பதாலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் கல்லார் மற்றும் கக்கநல்லா சோதனைச் சாவடிகள் வழியாக நுழையும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட அனைத்து வாகனங்களுக்கும் ரூ.30 பசுமை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

கொரோனா காரணமாக தற்போது பசுமை வரி வசூலிக்கப்படுவது இல்லை. இதற்கிடையே, பசுமை வரி உயர்த்தப்பட்டு உள்ளதுடன், வருகிற 1-ந் தேதி முதல் முதன்முறையாக இருசக்கர வாகனங்களுக்கும் பசுமைவரி வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

நீலகிரியில் சாலையோரங்களில் குப்பைகள் அதிகமாக காணப்படுவதால் தினமும் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பசுமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பஸ், லாரி, நான்கு சக்கர வாகனங்களுக்கு பசுமை வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

வனத்துறை மற்றும் உள்ளாட்சி துறையில் பசுமையை பாதுகாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாமல் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கி பசுமையான மாவட்டமாக நீலகிரியை மாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News