செய்திகள்
லாலாபேட்டையில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த காட்சி.

லாலாபேட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2021-10-22 08:25 GMT   |   Update On 2021-10-22 08:25 GMT
லாலாபேட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
லாலாபேட்டை:

கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் மண்பாண்டம் தயாரிக்கும் குடும்பத்தினர் சிலர் வசித்து வருகின்றனர். இவர்கள் களிமண்ணால் ஒவ்வொரு கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். அதன்படி பொங்கலுக்கு பொங்கல் பானை, திருவிழா காலங்களில் அக்கினிச்சட்டி, உருவ பொம்மைகள், அடுப்பு, கோடை காலங்களில் பெரிய மண் பானை, ஆடி மாதங்களில் கஞ்சி கலயம், விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் உள்ளிட்டவற்றை களிமண்ணால் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி கார்த்திகை தீபத்திருநாள் இன்னும் ஒரு மாதத்தில் வர இருப்பதால் தற்போது கோவில்கள், வீடுகளில் அகல் விளக்குகளை வைக்க ஏற்றவாறு களிமண்ணால் தயாரித்து வருகின்றனர். இதனால் லாலாபேட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ஒரு அகல் விளக்கு ரூ.1-க்கு விற்கின்றோம். இதனை கரூர், நொய்யல், வேலாயுதம்பாளையம் வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்தமாக வியாபாரத்திற்கு வாங்கி செல்கின்றனர். தற்சமயம் மழை விட்டு விட்டு பெய்வதால் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளை வெயிலில் உலர வைக்க முடியாமல் வீட்டிலேயே உலர வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொழில் சற்று மந்தமாகவே உள்ளது என்றனர்.
Tags:    

Similar News