செய்திகள்
குஷ்பு

தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லை- குஷ்பு பேட்டி

Published On 2020-09-14 07:14 GMT   |   Update On 2020-09-14 07:14 GMT
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட போவதாக வெளிவரும் தகவல்கள் தவறானது. தேர்தலில் போட்டியிடும் எண்ணமே எனக்கு கிடையாது என்று குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை:

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது. விரைவில் இடைத் தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த தொகுதியில் மீன்டும் காங்கிரஸ், பா.ஜனதா இடையே போட்டி ஏற்படுவது உறுதி.

இரு கட்சிகளிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டு இப்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட போவதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இன்று புதிய டி.வி. தொடர் பூஜை நிகழ்ச்சிக்காக சென்ற குஷ்புவிடம் இது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

தேர்தல் வரும் போதெல்லாம் என்னை பற்றி இப்படி யூகமான செய்தி வருவது புதிதல்ல.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமாரின் திடீர் மறைவு காங்கிரசுக்கு மிகப் பெரிய இழப்பு. அந்த தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சி மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம்.

நான் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட போவதாக வெளிவரும் தகவல்கள் தவறானது. தேர்தலில் போட்டியிடும் எண்ணமே எனக்கு கிடையாது.

கட்சி எனக்கு என்ன பணி கொடுக்கிறதோ அதை செய்வேன். தேர்தலை பொறுத்த வரை கூட்டணி, வேட்பாளர்கள் என்பதெல்லாம் கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News