ஆன்மிகம்
தஞ்சை பெரியகோவிலில் சிவகாமி அம்மனுடன் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

கும்பகோணத்தில் நடராஜர் சந்திப்பு உற்சவம்

Published On 2020-01-11 05:10 GMT   |   Update On 2020-01-11 05:10 GMT
கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் சந்திப்பு உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மகாமகம் தொடர்புடைய சிவன் கோவில்களில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.

இதில் ஆதிகும்பேஸ்வரர் கோவில், நாகேஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், காசி விசுவநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கவுதமேஸ்வரர் கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், ஞானபுரீஸ்வரர் கோவில், கோடீஸ்வரர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகிய 11 சிவன் கோவில்களில் இருந்து நடராஜர் புறப்பாடாகி ஒரே இடத்தில் சந்திக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெற்றது. முன்னதாக 11 கோவில்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடராஜருக்கு சந்தனம், பால், விபூதி உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை அந்தந்த கோவில்களில் இருந்து சிவகாமி அம்மனுடன் நடராஜர் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து ஆதிகும்பேஸ்வரர் கீழவீதியில் 11 கோவில்களில் இருந்து புறப்பாடாகி வந்த நடராஜரும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் உற்சவம் நடைபெற்றது.

அப்போது திருமுறை பாராயணம் மற்றும் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மந்திர பீடேஸ்வரி பக்தர்கள் குழுவின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஆருத்ரா தரிசனத்தை காண வந்த பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் பக்தர்கள் குழுவின் சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நடராஜர் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரிய கோவிலில் சிவகாமி அம்மனுடன் அருள்பாலித்்து வரும் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.
Tags:    

Similar News