செய்திகள்
பிரதமர் மோடியுடன் அவரது தாயார் ஹீராபென்

வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்துங்கள் - பிரதமர் தாயாருக்கு பஞ்சாப் விவசாயி கடிதம்

Published On 2021-01-25 00:10 GMT   |   Update On 2021-01-25 00:10 GMT
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனிடம் வலியுறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுககு பஞ்சாப் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த சூழலில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21-ம் தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.  இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

டெல்லியில் வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்தன. டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனிடம் வலியுறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு பஞ்சாப் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்பீந்தர் சிங் என்ற விவசாயி எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:

கனமான இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, உணவளிக்கும் விவசாயிகள் டெல்லி சாலையில் கடும் குளிரில் துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி, தங்கள் மகனிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும். 

நீங்கள் கூறினால் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை அவர் திரும்பப் பெறுவார் என்று நான் நினைக்கிறேன், ஒரு நபர் தனது தாயைத் தவிர வேறு யாரின் வார்த்தையையும் மறுக்க முடியும். ஏனெனில் நம் நாட்டில் தாய் ஒரு கடவுளாகக் கருதப்படுகிறார். உங்கள் மகன் (பிரதமர் மோடி) உங்கள் கோரிக்கையை ஒருபோதும் மறுக்க மாட்டார். 

உங்கள் மகன் உங்கள் பேச்சைக் கேட்டு இந்த கறுப்புச் சட்டங்களை ரத்து செய்வார் என்று நான் நம்புகிறேன். முழு நாடும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும். ஒரு தாய் மட்டுமே தன் மகனின் காதைப் பிடித்து இழுத்து உத்தரவு போடலாம். இந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட்டால், அது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படும், இதில் யாருக்கும் தோல்வியில்லை என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News