செய்திகள்
கோப்பு படம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

Published On 2020-03-28 02:51 GMT   |   Update On 2020-03-28 02:51 GMT
தொழிலாளர்கள் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்வதை தடுத்து நிறுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் முடங்கி உள்ளன. வயல்களில், ஓட்டல்களில், கடைகளில் வேலைசெய்து வந்த கூலித் தொழிலாளர்களும் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு போய் விடுமாறு வேலைக்கு அமர்த்தியவர்கள் கூறி உள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் வாகன வசதிகள் இல்லாததால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் உணவின்றி, குடிக்க தண்ணீர்கூட இன்றி கால்நடையாக நடந்து செல்கிற அவல நிலை இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இதில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இப்படி தொழிலாளர்கள் கூட்டமாக வெளியேறுவதை தடுத்து நிறுத்தும்படி மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதையொட்டி உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

இடம் பெயர்ந்து வந்த விவசாய கூலி தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமாக வெளியேற்றப்பட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வழியாக அமையும்.

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கி உள்ளது.

பாதிப்புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்கள் குழுக்களுக்கு தேவையான இலவச உணவுதானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ரேஷன்கடைகள் மூலம் வழங்குவதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதையொட்டி அரசாங்கம் எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ஓட்டல்களும், வாடகை கட்டிடங்களும், விடுதிகளும் தொடர்ந்து செயல்படும்விதத்தில், அவற்றுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்; அப்போதுதான் அரசு பிறப்பித்த தடை உத்தரவை பின்பற்றிக்கொண்டு, மாணவர்களும், பணிபுரியும் பெண்கள் விடுதிகளில் தங்கி இருப்பவர்களும், தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள இடங்களில் தொடர்வார்கள் என்றும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News