செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

Published On 2020-12-19 01:46 GMT   |   Update On 2020-12-19 01:46 GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
மதுரை:

மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் எப்போது நாட்டப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பில், ‘கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 45 மாதத்திற்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடம் 8 மாதத்துக்கு மேல் ஆகிறது. கட்டிடம் கட்டும் பணி ஏற்கனவே தொடங்கி இருக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பமில்லையா?’ எனவும் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக முதலில் 200 ஏக்கர் நிலமும், பின்னர் 23 ஏக்கர் நிலமும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது’ என்று தெரிவித்தார்.

பின்னர் அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார். அரசு வக்கீல் தெரிவித்த இந்த தகவலை கேட்டு நீதிபதிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

அப்போது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டது. தற்போது கட்டுமான பணிகளுக்கு கடன் ஒப்பந்தம் தொடர்பாக ஜப்பானிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு நிதி கிடைத்துவிடும். அதன்பின் பணிகள் தொடங்கி 45 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும்’ என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய சமயத்தில்தான் பிற மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. மற்ற இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்? கொரோனா ஊரடங்கை காரணம் காட்ட வேண்டாம். ஊரடங்கு சமயத்திலும் ஜப்பான் நிறுவனம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு இருக்கிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், ‘மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக ‘தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ், தமிழக அரசு இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை ஒப்படைக்கவில்லை என தவறான தகவலை தந்த அந்த அதிகாரி யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என மத்திய அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News