ஆன்மிகம்

கோட்டார் சவேரியார் பேராலயத்தில் இன்று தேர் பவனி

Published On 2018-12-01 03:24 GMT   |   Update On 2018-12-01 03:24 GMT
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 8-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை தேர் பவனி நடைபெறுகிறது.
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

8-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) 9-ம் நாள் திருவிழா ஆகும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

திருவிழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. 3-ந் தேதியன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலியில் பங்கேற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.

நாகர்கோவில் நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும் பீச்ரோடு, ஆயுதப்படை முகாம் ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர், செட்டிகுளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, செட்டிகுளம் சந்திப்பு, இந்துக்கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணி முதல் 3-ந் தேதியன்று திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News