செய்திகள்
மேட்டூர் அணை

காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Published On 2021-07-16 07:13 GMT   |   Update On 2021-07-16 07:13 GMT
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து அந்த அணைகளில் இருந்து நேற்று முதல் மீண்டும் உபரி நீர் காவிரியில் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நாளை காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது .

மேட்டூர் அணைக்கு இன்று 2 ஆயிரத்து 411 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 72.16 அடியாக இருந்தது.

Tags:    

Similar News