லைஃப்ஸ்டைல்
‘ஜிம்மில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை

‘ஜிம்மில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை

Published On 2019-07-18 06:19 GMT   |   Update On 2019-07-18 06:19 GMT
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது எதுபோன்ற அடிப்படைக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
* சிலர் ஜிம்மில் அணிவதற்கென்றே ஒரு உடையை வாங்கி இருப்பார்கள். அதைத் துவைக்காமலேயே தினமும் ஜிம்முக்கு அணிந்து வருவார்கள். ‘எப்படியும் வியர்க்கத்தானே போகிறது’ என்ற ஒரு வியாக்கியானத்தை வேறு சொல்வார்கள். அதற்காக உங்கள் உடைகளின் நாற்றத்தைப் பிறர் பொறுத்துக்கொள்ள வேண்டுமா, என்ன? துவைத்து அணியுங்கள். ஜிம்முக்காக இரண்டு செட் உடைகளை வைத்திருங்கள்.

* பொதுவாக, நண்பர்கள் ஜிம்மில் நுழைந்து பயிற்சி செய்யும்போது பேசிக் கொள்வதில்லை. சிலர் ரேடியோ, மினி சி.டி.பிளேயர் போன்றவற்றைக் கொண்டுவந்து அதை அதிக வால்யூமில் ஒலிக்கவிட்டு உடற்பயிற்சி செய்வார்கள். இது அவர்களுக்குச் சுக அனுபவமாக இருக்கலாம். ஆனால், அமைதியான சூழலில் உடற்பயிற்சி செய்ய வருபவர்களுக்கு இது தலைவலி. பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஜிம்முக்கும் பொருந்தும்.

* அழுக்கடைந்த காலணிகளோடு ஜிம்முக்குள் நுழைந்து அங்கே உங்கள் தடங்களைப் பதிப்பது தவறு. அதுவும் டிரெட் மில், ஸ்டாடிக் சைக்ளிங் போன்றவற்றில் உங்கள் காலணிகள் பல நிமிடங்கள் கருவிகளில் பதிந்திருக்கும். உரிய மிதியடிகளை ஜிம்மின் வாசற்புறம் போட்டு வைக்க ஏற்பாடு செய்யுங்கள். மறக்காமல் அவற்றில் உங்கள் ஷூக்களை நன்கு தட்டிவிட்டுக் கொண்டு பிறகு உள்ளே நுழையுங்கள்.



* சில கருவிகளில் அதைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச நேரத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதிக நேரம் அதில் பயிற்சி செய்வது உங்கள் இஷ்டம். ஆனால் அடுத்தவர்கள் காத்திருக்கும்போது அதிக நேரம் பயிற்சியில் ஈடுபடுவது நியாயம் அல்ல. இப்படி அடிக்கடி நேர்ந்தால் ஜிம்முக்கு நீங்கள் வரும் நேரத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.

* சிலர் அதிக அளவில் டியோடரண்டையோ சென்ட்டையோ தங்கள் உடைகளின்மீது தெளித்துக் கொண்டு ஜிம்முக்கு வருவார்கள். பயிற்சி செய்யும்போது இந்த மணம் அறை எங்கும் பரவும் (வியர்வை மணமும் கலந்து!). அதைவிட ஒருபடி அதிகமாக அவர்கள் ஜிம்மை விட்டு வெளியேறிய பிறகும் அந்த நறுமணக் கலவை ஜிம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். சிலருக்கு இந்த மணம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே பர்ஃப்யூம் பயன்படுத்தும்போது நினைவில் கொள்ளுங்கள்.

* நகரக்கூடிய பொருட்களைக் கொண்டு நீங்கள் பயிற்சி செய்ய வாய்ப்பு உண்டு. யோகாசனம் செய்வதற்கான பாய், டம்பிள் (Dumbell) போன்றவை. அவற்றை எடுத்த இடத்திலேயே சரியாக மீண்டும் வைக்க வேண்டியது அவசியம். முக்கியமாகப் பிறருக்கு ஆபத்து உண்டாகக் கூடும் வகையில் (தடுக்கி விழுதல், மேலிருந்து விழுதல்) அவற்றை வைக்கக் கூடாது.

* ஜிம்முக்குச் செல்லும்போது ஒரு டர்க்கி டவலை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல நீங்கள் பயன்படுத்திய - நீங்கள் கைகளால் பற்றிய கருவிகளின் பகுதிகளை - இறுதியில் துடைத்துவிட்டுக் கிளம்புவதுதான் நாகரிகம்.
Tags:    

Similar News