செய்திகள்
காங்கிரஸ்

பாண்லே பால் பாக்கெட்டில் திருக்குறள் அச்சிட வேண்டும்-இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை

Published On 2019-11-26 16:49 GMT   |   Update On 2019-11-26 16:49 GMT
பாண்லே நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பால் மற்றும் மோர் பாக்கெட்டுகளில் திருக்குறள்களை விளக்க உரையுடன் அச்சிட்டு வழங்கிட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

பாகூர்:

இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விக்னேஷ் கந்தசாமி கூட்டுறவு பதிவாளர் மற்றும் பாண்லே நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

புதுவை பாண்லே நிறுவனம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.

மக்கள் பணியை குறைந்த லாப நோக்கத்தோடு செய்து வரும் பாண்லே நிறுவனம் தம்மால் இயன்ற ஒரு சிறு முயற்சியாக அறப்பணியும் மேற்கொள்ள வேண்டுமென தங்கள் நிறுவனத்தின் நுகர்வோர் என்ற முறையிலும் என்னைச் சார்ந்த இளைஞர்கள் சார்பாகவும் ஒரு கோரிக்கையை தங்கள் முன் வைக்கிறேன்.

புதுவை வாழ் தமிழ்ச்சமூக நலன் கருதி குழந்தைகள் மத்தியில் திருக்குறள் வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், மக்கள் மனதில் அறம்சார்ந்த கருத்துகளை பரப்பும் வகையிலும், பாண்லே நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பால் மற்றும் மோர் பாக்கெட்டுகளில் பல்வேறு நற்பொருள் உணர்த்தும் எளிய திருக்குறள்களை விளக்க உரையுடன் அச்சிட்டு வழங்கிட பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் வளர்ச்சி குறித்த ஆர்வம் இளைய சமூகத்தினரிடம் வளர்ந்து வருவது ஆரோக்கியமான ஒன்று என்பதால் பாண்லே நிறுவனம் மேற்கண்ட நடவடிக்கையை எடுக்க முன் வரும் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News