செய்திகள்
கொலை

நாங்குநேரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்துக்கொலை?- போலீசார் தீவிர விசாரணை

Published On 2021-07-09 08:37 GMT   |   Update On 2021-07-09 08:37 GMT
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38).

இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபத்ரா (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

முத்துக்குமாருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவ்வப்போது மதுக்குடிக்க செல்வார்.

நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார், இரவு படுகாயத்துடன் வீட்டு வாசல்படி அருகே கிடந்தார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

பலியான முத்துக்குமார் பெயிண்டராகவும், அந்த பகுதியில் உள்ள பாரில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால் காலையில் வேலைக்கு செல்லும் முத்துக்குமார் இரவில் வெகுநேரம் கழித்துதான் வீடு திரும்புவாராம். இதுதொடர்பாக முத்துக்குமார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் முத்துக்குமார் காயங்களுடன் பிணமானதால், அவர் மதுபோதையில் கீழே விழுந்து பலியானாரா? அல்லது வேறு யாரேனும் அடித்துக்கொலை செய்தனரா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது அக்காள் மகன் ராஜேஷ் (29) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரில், கள்ளக்காதல் விவகாரத்தில் முத்துக்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்படுவதாக கூறிஇருந்தார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முத்துக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உள்ளார்கள். பிரேத பரிசோதனை முடிவில் அடுத்த கட்ட விசாரணையை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News