செய்திகள்
வானதி சீனிவாசன்

‘துக்கடா’ அரசியல்வாதி என்பதா?- கமல்ஹாசனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

Published On 2021-03-29 10:49 GMT   |   Update On 2021-03-29 10:49 GMT
கஷ்டப்பட்டு உழைத்து பெரிய இடத்திற்கு வந்துள்ள என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என கமல் பேசியதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை:

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து நேற்றுமுன்தினம் மத்திய மந்திரி ஸ்மிருதி ரானி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் தொடர்பாக வானதி சீனிவாசனுடன், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விவாதத்திற்கு தயாரா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு பதிலடியாக மக்கள் நீதிமய்யம் கட்சி பொதுசெயலாளர் குமாரவேல் அறிக்கை வெளியிட்டார். அதில், மத்திய மந்திரி ஸ்மிருதி ரானி, கமல்ஹாசனை வானதி சீனிவாசனுடன் விவாதத்துக்கு அழைத்துள்ளார்.

விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாக திறமை உள்ளது என்பது அவரது வாதம். அதனை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.

முதலில் எங்கள் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார்.

மேலும் மத்திய மந்திரிகள் ஒவ்வொருடனுடம் விவாதம் செய்ய அவருக்கு விருப்பம். அவர்களுடன் விவாதித்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதம் நடத்துகிறோம் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதில் கூறியுள்ளார்.

அதில் குக்கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, வக்கீலாக பணியாற்றியுள்ளேன். பா.ஜனதாவில் சேர்ந்து மக்கள் நல பணிகளை செய்து சிறிது, சிறிதாக உயர்ந்து அந்த கட்சியின் மகளிரணி தேசிய தலைவி என்ற நிலைக்கு வந்துள்ளேன். அப்படி கஷ்டப்பட்டு உழைத்து பெரிய இடத்திற்கு வந்துள்ள தன்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என கூறுகின்றனர்.

இந்த விமர்சனத்தின் மூலம் பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் மரியாதை இதுதானா?, பொது வாழ்வில் பல தடைகளைக் கடந்து வரும் பெண்களை இப்படித்தான் இவர்கள் கேவலப்படுத்துவார்களா?


இப்படி பெண்களை பேசுபவர்கள் தான் பெண்களை காப்பாற்றுவார்களா? என்பதை மக்களாகிய நீங்கள் உணரவேண்டும். மேலும் இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியும், அதன் தலைவர் கமல்ஹாசனும் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News