செய்திகள்
சுஜாதா மேண்டல் கான் - சவுமித்ரா கான்

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்த பாஜக எம்.பி - அரசியலால் பிரிந்த குடும்பம்

Published On 2020-12-21 13:59 GMT   |   Update On 2020-12-21 13:59 GMT
மனைவி திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததால் அவரை விவாகரத்து செய்ய பாஜக எ.ம்பி முடிவு செய்துள்ளார். இதனால் குடும்பமே இரண்டாக பிரிந்துள்ளது.
கொல்கத்தா:

மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசும், இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவும் தீவிர முயற்சி
மேற்கொண்டு வருகிறது.

திரிணாமுல் காங்கிரசில் இருந்து 35-க்கும் அதிகமான தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜகவில் இருந்தும் பலர் திரிணாமுல் காங்கிரசில் இணைகின்றனர். இந்நிலையில், இந்த அரசியல் மோதலில் ஒரு குடும்பமே இரண்டாக பிரிந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  மனைவி இணைந்ததால் கோபம் அடைந்த பாஜக எம்.பி, மனைவியை விவகாரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
பாஜக எம்.பி சவுமித்ரா கானின் மனைவி பெயர் சுஜாதா மோண்டல் கான். இவரும் பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகித்துவந்துள்ளார்.

இந்நிலையில், சுஜாதா மேண்டல் கான் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இதனால், கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்த கணவரும் பாஜக எம்.பி. சவுமித்ரா கான் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது பாஜக சார்பில் பிஸ்னாபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சவுமித்ரா கான். தேர்தலின் போது குற்றவழக்கில் தொடர்புடையதால் பிஸ்னாபூர் தொகுதிக்குள் நுழைய சவுமித்ரா கானுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அப்போது சவுமித்ரா கானுக்கு ஆதரவாக தனிநபராக அவரது மனைவி சுஜாதா மேண்டல் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 



தேர்தலில் சவுமித்ரா கான் வெற்றிபெற அவரது மனைவி சுஜாதாவின் தேர்தல் பிரசாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்தலில் தனது கணவர் வெற்றிக்கு கடுமையாக பாடுபட்ட போதும் தனக்கு பாஜகவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என சுஜாதா குற்றம் சாட்டினார்.

மனைவி சுஜாதா திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி. சவுமித்ரா கான், ‘எல்லா குடும்பங்களிலும் சண்டை உள்ளது. ஆனால், குடும்பத்தை விட்டுவிட்டு உங்கள் ஆதாயத்திற்காக அரசியலை தேர்தெடுத்துள்ளீர்கள். நீங்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளீர்கள். அது உங்கள் தவறு.

அரசியலால் 10 ஆண்டு கால எங்கள் திருமண பந்தம் முறிந்துவிட்டது. பாஜகவுக்காக நான் கடுமையாக உழைப்பேன். நான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவது இல்லை” என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

மேலும், தனது மனைவி சுஜாதா மோண்டல் கானை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சவுமித்ராகா தெரிவித்துள்ளார். எனது பெயருக்கு பின்னால் உள்ள ’கான்’-னை பயன்படுத்த வேண்டாம் எனவும் தனது மனைவி சுஜாதா மோண்டல் கானுக்கு பாஜக எம்பி சவுமித்ரா கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த சுஜாதா கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் வேறு குடும்பம் வேறு.  அவர் (கணவர்) என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை செய்யட்டும். ஆனால், ஒரு நாள் கண்டிப்பாக உணர்வார் எனக்கு நம்பிக்கை உள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கூட அவர் வரலாம்” என்றார்.

அரசியலால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்த சம்பவம் மேற்குவங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News