செய்திகள்
ஹசில்வுட்

சிட்னி ஒருநாள் கிரிக்கெட்: 66 ரன்னில் இந்தியா தோல்வி- கோலி, ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் சொதப்பல்

Published On 2020-11-27 12:28 GMT   |   Update On 2020-11-27 12:28 GMT
சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா தோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதத்தால் 374 ரன்கள் குவித்தது.

பின்னர் 375 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் இரண்டு மூன்று ஓவர்களில் இந்தியாவுக்கு ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்தியாவின் ஸ்கோர் 5.2 ஓவரில் 53 ரன்கள் இருக்கும்போது மயங்க் அகர்வால் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். ஹசில்வுட் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் விராட் கோலி 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பவர் பிளேயில் இந்தியா 80 ரன்கள் அடித்தாலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது, மூன்று விக்கெட்டுகளையும் ஹசில்வுட் சாய்த்து ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

கேஎல் ராகுல் 12 ரன்னில் வெளியேற இந்தியா 101 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் தவான் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹர்திக் பாண்ட்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் போட்டியில் சுவராஸ்யம் கூடியது.

தவானும், ஹர்திக் பாண்ட்யாவும் அரைசதம் அடித்து முன்னேறி சென்று கொண்டிருந்தனர். இந்திய அணி 34.3 ஓவரில் 229 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 86 பந்தில் 74 ரன்கள் எடுத்து ஆடம் ஜம்பா பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 128 ரன்கள் குவித்தது.

தவான் ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் வெற்றிக் கனவு தகர்ந்தது. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் அடித்து வெளியேறினார்.

ஜடேஜா 25 ரன்களும், நவ்தீப் சைனி 29 ரன்களும் அடிக்க இந்திய அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி 29-ந்தேதி (நாளைமறுநாள்) நடக்கிறது.
Tags:    

Similar News