பெண்கள் உலகம்
ஆபத்தில் இருந்து பெண்களை காக்கும் ஆயுதம்..

ஆபத்தில் இருந்து பெண்களை காக்கும் ஆயுதம்..

Published On 2022-04-23 07:15 GMT   |   Update On 2022-04-23 07:15 GMT
தற்போது ஏராளமான தற்காப்புக் கலைகள் இருக்கின்றன. அதில் எந்த கலையை பெண்கள் கற்றுக்கொண்டாலும் அது ஆண்களை எதிர்க்கும் கலையல்ல.
“ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்று சொல்லப்பட்டாலும், உடலளவில் பெண்கள் மென்மையானவர்கள்தான். இயற்கை பெண்களை அப்படித்தான் படைத்திருக்கிறது. அதனால் பெண்களை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு ஆணுக்கும் உள்ளது. ஆனால் எல்லா ஆண்களும் அந்த கடமையை நிறைவேற்றுவார்கள் என்று சொல்வதற்கில்லை. அதனால் ஒவ்வொரு பெண்ணும் தன்னை தற்காத்துக்கொள்ளும் தைரியத்தையும், துணிச்சலையும் பெறவேண்டும். ஏதாவது ஒரு தற்காப்புக்கலையை கற்றுக்கொள்வதன் மூலம்தான் அந்த தைரியத்தை பெண்களால் பெறமுடியும்..” என்கிறாா் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்.

இவர் சிறந்த நடிகர் என்பதோடு, தற்காப்புக்கலை பயிற்சியாளராகவும் திகழ்கிறார். நடிக்க வருவதற்கு முன்பே தற்காப்புக் கலையில் நிபுணராகிவிட்ட அக்‌ஷய்குமார், அதற்கான மையத்தை அமைத்து பெண் களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

“வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் என்பதை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். எந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது. அதனால் எல்லா நேரத்திலும் அவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். பாதுகாப்பு என்றதும், வெளியே மட்டும்தான் அது பெண்களுக்கு தேவை என்று கருதிவிடக்கூடாது. வீட்டிற்குள்ளேயும் பெண்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவர்கள் எல்லா சூழ்நிலையிலும் பாதுகாப்பு உணர்வுடன் வாழ்வதற்காக, அவர்களை மனதளவிலும் உடலளவிலும் தயார்படுத்தவேண்டும்.

தற்போது ஏராளமான தற்காப்புக் கலைகள் இருக்கின்றன. அதில் எந்த கலையை பெண்கள் கற்றுக்கொண்டாலும் அது ஆண்களை எதிர்க்கும் கலையல்ல. பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான கலை. தங்களை எதிர்நோக்கியுள்ள அபாயத்தை பெண்கள் உணரும் கலை. இன்றைய பெண்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று.

சமீபகாலமாக அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் உள்ள எல்லோரையும் தலைகுனியச் செய்கிறது. இதற்கு காரணம் யார்? நாம் தான். பெண்கள் அவர்களை தற்காத்துக்கொள்ளும் வழி முறையை அவர்களுக்கு நாம் கற்றுத்தரவில்லை. சமூகத்தின் இந்த குறை நீக்கப்படவேண்டும். இந்த நிலையை மாற்ற என் பங்கு என்ன என்று சிந்தித்து, பெண்களுக்கான விசேஷ தற்காப்பு பயிற்சி மையம் ஒன்றை தொடங்கினேன். ‘வுமன் செல்ப் டிபென்ஸ் சென்டர்’ என்பது அதன் பெயர். அங்கு பல பெண்கள் ஆர்வத்துடன் வந்து கற்றுக் கொள்கின்றனர். மும்பையில் இந்த மையம் இருக்கிறது. நாட்டின் இதர நகரங்களிலும் அதனை தொடங்க உள்ளேன்.

ஒரு மாத காலம் தற்காப்புக் கலையின் அடிப்படைகள் அனைத்தையும் இலவசமாக கற்றுக்கொடுக்கிறோம். இதில் திடீர் தாக்குதலை தடுப்பது, கால்களை உயரத் தூக்கி உதைப்பது, எதிரியை நெற்றிப் பொட்டில் தாக்கி மயக்கமடையச் செய்வது, கைகளை மடக்கிப் பிடித்து கீழே சாய்ப்பது, எதிராளி தாக்கவரும்போது கீழே குனிந்து தப்பிப்பது போன்ற அடிப்படை பயிற்சிகள் இடம்பெறும்.

உடல் அளவில் அவர்களை இவ்வாறு தயார்படுத்தும் அதே நேரத்தில், மனோதிடத்தை உருவாக்குவதற்காக தைரியமிக்க பெண்களின் சாகச வரலாற்றை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம். நெருக்கடியில் சிக்கிக்கொண்டால் தப்பிப்பதற்கு விசேஷ பயிற்சிகளும் வழங்குகிறோம்.

ஒரு பெண்ணுக்கு தற்காப்புக் கலை தெரியும் என்ற விஷயமே எதிரியை பின்வாங்கவைக்க போதுமானது. ‘தனக்கு தற்காப்புக் கலை தெரியும்’ என்பதை எதிரிக்கு உணரவைப்பதற்காகவே நாங்கள் முதல்கட்ட பயிற்சி வழங்குகிறோம். பெண் நிற்கும் நிலை, அவர் சத்தம் எழுப்பும் நிலை, அவர் பார்க்கும் கோணம் எல்லாமே எதிரியை கதிகலங்கவைக்கும். பெண் அப்படி தயாராக நிற்பது, எதிரிக்கு பதற்றத்தை தோற்றுவிக்கும். அப்போது பெண்கள் எதிர்பாராதவிதத்தில் நடத்தும் தாக்குதல் எதிராளியை நிலை குலையச் செய்துவிடும்.

பெண்கள் எல்லா நேரத்திலும் பெரிதாக எந்த ஆயுதத்தையும் உடன் வைத்திருக்க முடியாது. பெரும்பாலும் கைப்பை, குடை போன்றவையே அவர்கள் கையில் இருக்கும். அவைகளை ஆயுதமாக்கி எப்படி தாக்குவது என்றும் சொல்லித்தருகிறோம். அடிப்படை தவிர கூடுதல் பயிற்சி களை பெற விரும்பும் பெண்களுக்கு அதற்குரிய நிபுணர்கள் மூலம் தொடர்ந்து பயிற்சி வழங்குகிறோம்.

தற்காப்புக் கலையின் முக்கிய அம்சமே எது வந்தாலும் பாா்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சல்தான். அந்த துணிச்சலைதான் பெண்களுக்கு முதலில் வழங்கவேண்டும். அந்த துணிச்சலை வர வழைத்து பெண்கள் வீறுகொண்டெழுந்தால் எதிரிகள் யாரும் அவர்கள் எதிரில் நிற்க முடியாது. அதுவும் இயற்கை அவர்களுக்கு தந்திருக்கும் கொடை. அதை பெண்களுக்கு உணர்த்துவதுதான் எங்கள் நோக்கம்” என்று கூறுகிறார், அக்‌ஷய்குமார்.
Tags:    

Similar News