செய்திகள்
திருப்பத்தூர் புதிய மாவட்ட தொடக்கவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கிய காட்சி.

2018-ம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: முதலமைச்சர் பேச்சு

Published On 2019-11-28 07:44 GMT   |   Update On 2019-11-28 11:46 GMT
2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர்:

திருப்பத்தூர் மாவட்டம் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர்கபில் ஆகியோர் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது சம்பந்தமாக பலதரப்பட்டவர்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது.

ஜெயலலிதா அரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் நான் கடந்த சுதந்திர தின விழா உரையில் இம்மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க இன்று திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி உள்ளது.

திருப்பத்தூர் நகரம் ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை என 2 பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி. ஜவ்வாது மலை இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள் நீரோடைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதன் ஒரு பகுதி ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமிர்தி உயிரியல் பூங்காவும் சுற்றுலா தலங்களாக இயங்கி வருகிறது.

ஆம்பூர், வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் அன்னியச் செலாவணி அதிக மீட்டு தருவதோடு மட்டுமல்லாமல் இங்கு மக்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை போன்ற இடங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1790- ஆம் ஆண்டிலேயே திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், சித்தூர், வடஆற்காடு மாவட்டங்களுடன் சேர்ந்து பயணித்தது. தற்போது புதிய மாவட்டமாக உதயமாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரம். திருப்பத்தூர் நகர வட்டத்தின் பரப்பளவு 17.98 சதுர கிலோமீட்டர் இந்த மாவட்டத்தில் மக்கள் தொகை 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 வருவாய் நிர்வாகத்தை பொருத்தமட்டில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என இரண்டு வருவாய்க் கோட்டங்களும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நாட்றாம்பள்ளி ஆகிய 4 வட்டங்களும் 15 உள்வட்டங்கள், 195 வருவாய் கிராமங்கள் உள்ளன.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை என 4 நகராட்சிகளும், 7 ஊராட்சி ஒன்றியம் ஆலங்காயம், நாட்றாம்பள்ளி மற்றும் உதயேந்திரம் என மூன்று பேரூராட்சிகள் 207 கிராம ஊராட்சிகள் உள்ளன.



புதிதாக மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவரும், சில எதிர்ப்பாளர்களும் ஒரு பொய்யான கருத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

தி.மு.க. ஆட்சியில் தான் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டதாக ஒரு பொய்யான தகவலை எதிர்க்கட்சி தலைவர் பரப்பி வருகிறார். ஆனால் ஜெயலலிதா இருந்தபோது சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறோம்.

2011-ம் ஆண்டு முதல் இன்று வரை ரூ.688 கோடி மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கி உள்ளோம்.

சுயதொழில் செய்து சொந்த காலில் நிற்க கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த திட்டம் எல்லாம் சிந்தாமல் சிதறாமல் கிராமப்புறத்தில் இருக்கின்ற ஏழை விவசாயி பெண் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார மேம்பாடு அடையச் செய்து வருகிறது.

நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 7 ஆயிரம் கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

இன்று புதிய மாவட்டம் தொடங்கிவைக்கப்பட்டு 7,977 பயனாளிகளுக்கு ரூ.94.37 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளன.

சத்தியத்தாய் வழியில் செல்லும் இந்த அரசில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வந்து சேரும். கிராம மக்கள் குறைகளை தெரிவிக்க முதல்-அமைச்சர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதியோர் உதவி தொகை 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என அறிவித்தோம். இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கியதை போல் இந்த ஆண்டு 10 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். நாளை சென்னை கோட்டையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றளவு 30 கிலோ மீட்டர் குறுகிய வட்டத்துக்குள் உள்ளது. இதன் மூலம் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் மக்கள் குறைகளை எளிதாக போக்கவே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2 மாவட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. இது வரலாற்று சாதனையாகும்.

மற்ற மாவட்டங்கள் தொடக்க விழா நடந்த போது வெயில் சுட்டெரித்தது. ஆனால் இன்று தட்பவெட்ப நிலை மாறியுள்ளது. குளுமையாக புதியமாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News