ஆன்மிகம்
ஆண்டாள்

மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 11

Published On 2020-12-26 01:28 GMT   |   Update On 2020-12-26 01:28 GMT
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள் :
 
குலத்திற்கே கொடியாக இருக்கும் பெண்ணை எழுப்பும் பாடல் இது.
 
கன்றுகளுடன் கூடியவை; இளமை மாறாமல் இருப்பவை; இப்படிப்பட்ட பசுக் கூட்டங்கள் பலவற்றைக் கறந்த கோபாலர்கள், தங்கள் பகைவர்களின் வலிமை அழியும்படியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று போர் செய்வார்கள். அப்படிப்பட்ட கோபாலர்களின் குலத்தில் தோன்றிய பொற்கொடியைப் போன்றவளே!
 
காட்டில் வாழும் மயிலைப் போன்ற சாயல் கொண்டவளே! வீதியில் நின்று இறைவன் புகழைப்பாட வேண்டிய நாங்கள், இப்போது உன் வீட்டின் முன் வாயிலில் வந்து பாடிக்கொண்டிருக்கிறோம். கார்மேகத்தைப் போல வடிவழகும், கருணையும் கொண்ட கண்ணனது திருநாமங்களைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.
 
ஆனால் நீயோ-உன் உடம்பைக்கூட அசைக்க மாட்டேன் என்கிறாய், வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டேன் என்கிறாய். செல்வமும், உத்தமமான குணங்களும் வாய்க்கப்பெற்ற நீ, எதை நினைத்து இப்படித் தூங்கிக் கொண்டிருக்கின்றாய். இப்படித் தூங்கலாமா? எழுந்து வா.
Tags:    

Similar News