செய்திகள்
பூண்டு

கொரோனாவால் நீலகிரி பூண்டுக்கு மவுசு அதிகரிப்பு

Published On 2020-09-17 09:22 GMT   |   Update On 2020-09-17 09:22 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி பூண்டுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. மும்பை, குஜராத், கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கிறார்கள்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, மலை காய்கறிகளையே விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வந்தனர். கடந்த சில காலங்களாகவே நீலகிரி மாவட்ட விவசாயிகள் பூண்டு விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வருடத்தில் 2 போகங்களாக பூண்டு பயிரிட்டு வருகிறார்கள்.

அதன்படி முதல் போகமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பிலும், 2-வது போகமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 1000 ஏக்கரிலும் பூண்டு பயிரிடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக மாவட்டத்தில் 20 ஆயிரம் டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பூண்டுகளை வாங்குவதற்காக அண்டை மாவட்டமான கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், வெளி மாநிலங்களான மும்பை, குஜராத், கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி பூண்டுக்கான மவுசு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பூண்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே. இதன் காரணமாக ஓட்டல்கள், வீடுகளில் மக்கள் அதிகளில் பூண்டு பயன்பாட்டிற்கு மாறியுள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பால் சர்வதேச விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி நாடுகளில் இருந்து பொருட்கள் வருவது தடை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சீனாவில் இருந்து தான் அதிகளவில் இந்தியாவிற்கு பூண்டு வரும். ஆனால் லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மக்கள் சீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக சீன பூண்டு வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இதையடுத்து நீலகிரி பூண்டுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது என்பதால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட உணவுகளில் பூண்டை சேர்த்து கொண்டுள்ளனர். குறிப்பாக வடமாநிலங்களில் பூண்டு பயன்பாடு அதிகரித்துள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் இங்கு வந்து பூண்டுகளை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.

கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர் என்றனர்.

Tags:    

Similar News