ஆன்மிகம்
கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-09-02 06:57 GMT   |   Update On 2021-09-02 06:57 GMT
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக கஜமுக சூரசம்ஹாரம் மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழா பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.

அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் வழிகாட்டுதலின்படி நேற்று காலை தொடங்கியது. முன்னதாக மூலவர் முன்பு உள்ள கொடி மரத்திற்கு கோவில் தலைமை பிச்சைகுருக்கள் தலைமையில் பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவர் கற்பகமூர்த்தி வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் ரிஷிப வாகனத்திலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து காலை 11.25 மணிக்கு கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். கொரோனா காலமாக உள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் உற்சவர் பிரகாரம் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன்படி தினந்தோறும் இரவு சிம்மம், பூதம், தாமரை, ரிஷபம், மயில், குதிரை, யானை ஆகிய வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு 6-ம் திருநாள் அன்று கோவில் முன்பு நடைபெறும் கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற உள்ளது. இதே போல் 9-ம் திருநாள் அன்று நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

10-ம் திருநாளான வருகிற 10-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி அன்று காலை பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் இரவு பஞ்ச மூர்த்தி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையொட்டி கோவில் முன்பு மின்னொளி அலங்காரம் அமைக்கும் பணிக்காக தற்போது கம்புகள் மூலம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். மேலும் திருவிழாவை தவிர்த்து மன்ற நேரங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் இருந்து வருபவர்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்த நிலையில் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News