செய்திகள்
மிதாலி ராஜ்

நான் தமிழ் நன்றாக பேசுவேன்: டுவிட்டரில் ட்ரோல் செய்த ரசிகருக்கு மிதாலி ராஜ் பதிலடி

Published On 2019-10-16 11:03 GMT   |   Update On 2019-10-16 11:06 GMT
தமிழ் தெரியாதா என டுவிட்டரில் ட்ரோல் செய்த ரசிகருக்கு இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் நிறைவு செய்த முதல் பெண் வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார். இவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றியது. இதில் மிதாலி ராஜ் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி அணியை வெற்றிகரமாக வழிநடத்துதல் மற்றும் சிறப்பான முறையில் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மிதாலி ராஜ்-க்கு ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின் தெண்டுகல்கர் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்தார்.

பாராட்டு தெரிவித்திருந்த சச்சினுக்கு, மிதாலி ராஜ் நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என் வாழ்வில் நான் பின்பற்றிய ஒருவரே என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி சாம்பியன்’’ என பதிவிட்டிருந்தார்.

இதுபோன்று பலரும் வாழ்த்து கூறினார்கள். இதற்கிடையே ஒருவர் ‘‘உங்கள் தாய்மொழி தமிழாக இருக்கையில் நீங்கள் இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் மட்டும் பேசுகிறீர்களே.... உங்களுக்கு தமிழ் தெரியாதா?” என கேலி செய்யும் வகையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தக்க பதிலடி கொடுத்த மிதாலி ராஜ், தமிழில் ஒரு டுவிட்டை பதிவிட்டார். அதில் ”தமிழ் என் தாய்மொழி..நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” இவ்வாறு அதில் கூறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News