ஆன்மிகம்
மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் கடைமுகதீர்த்தவாரி நடைபெற்றது

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி

Published On 2021-11-17 06:09 GMT   |   Update On 2021-11-17 06:09 GMT
மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் கடைமுகதீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்த படம்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான கடைமுக தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மயூரநாதர், ஐயாறப்பர், வதாரண்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். அப்போது உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தொடர்ந்து தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரி விழாவையொட்டி காவிரியின் இரு கரைகளிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Tags:    

Similar News