உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை 11-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Published On 2022-05-05 09:19 GMT   |   Update On 2022-05-05 09:19 GMT
ராணிப்பேட்டை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை 11-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை 11-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் தெரிவித்தார். 

இதுகுறித்து ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:-

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தெரு மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து பங்க், ஜெனரேட்டர்கள், வாகனங்கள் பழுது பார்த்தல், டீக்கடை மேடை, தள்ளு வண்டிகள், அடுப்புகள் என பல்வகைப்பட்ட தற்காலிக/நிரந்தர கடைகள் கட்டப்பட்டு வருகிறது. 

மழைநீர் வடிகால்வாய்களின் மீது மேடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளுக்கு மிகுந்த இடையூறும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. 

தெரு, சாலைகள் மற்றும் கால்வாய்கள் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் வரும் 11ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து இந்த தற்காலிக நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

அவ்வாறு இல்லையெனில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு மேற்படி தற்காலிக நிரந்தர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் மேற்படி செலவுத் தொகை தங்களிடமிருந்து வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேபோல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு குறு கடைகள் வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருக்கவோ அல்லது தனி நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் விற்பனையாளர்களுக்கு ரூ.1000 முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் நகராட்சி குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் இணைத்து தண்ணீர் உறிஞ்சினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் நகராட்சி பணியாளர்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்க வரும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

கலெக்டர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ராணிப்பேட்டை நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றிட ராணிப்பேட்டை நகராட்சி மிகவும் சிரத்தை மேற்கொண்டு வருகிறது இதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் தெரிவித்தார்.
Tags:    

Similar News