செய்திகள்
கோப்புப்படம்

பள்ளிகளில் ஆன்லைன் புகார் பெட்டி- மாணவிகள் ரகசியமாக தகவல் தெரிவிக்கலாம்

Published On 2021-07-22 10:11 GMT   |   Update On 2021-07-22 10:11 GMT
ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தும் போது அதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் சீண்டல் சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் சம்பவம் சமீபத்தில் வெட்ட வெளிச்சமானது.

தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்து வருகிறார்கள்.

இதனை தடுக்கும் வகையில் பள்ளிகளில் ஆன்லைன் புகார் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆன்லைன் புகார் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்துஸ்தான் இண்டர்நேஷ்னல் பள்ளி இணையதளம் மூலமாக மாணவிகள் புகார் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

இதே போல் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, பிரத்யேக இ-மெயில் முகவரியை உருவாக்கி மாணவிகளுக்கு வழங்கி உள்ளது.

பள்ளி மாணவிகள், பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை ரகசியமாக தெரிவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தும் போது அதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ரகசியமாக ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிப்பார்கள் என்று தனியார் பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News