ஆன்மிகம்
மதுக்குடத்தை சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில் திருவிழா: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மதுக்குடம் எடுப்பு விழா

Published On 2021-10-27 06:58 GMT   |   Update On 2021-10-27 06:58 GMT
100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் மதுக்குடங்கள் தலையில் சுமந்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து மாணிக்கநாச்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மன் குளத்தில் கரைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் அருகே உள்ள தெற்குப்பட்டியில் அமைந்துள்ள மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத விழாவை முன்னிட்டு மதுக்குடம் எடுப்பு விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டி கண்டரமாணிக்கம் நாட்டார்களால் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்கிழமை காப்பு கட்டப்பட்டு, தொடர்ந்து 2-ம் செவ்வாய் கிழமை மது எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு நாட்டார்களால் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போன்று இந்த ஆண்டும் கடந்த 19-ம் தேதி, ஐப்பசி மாதம்முதல் செவ்வாய்கிழமையில் அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

விழாவில் நேற்று வடக்குத்தெரு, கண்டர மாணிக்கம் தெற்குத்தெரு ஆகிய பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புனிதநீர், வேப்பிலை, தென்னம்பாலை கலந்த மதுகுடம் மற்றும் முளைப்பாரி எடுத்து கண்டரமாணிக்கம் சவுக்கையில் வைத்து கும்மி கொட்டி வழிபாடு செய்தனர்.

பின்பு அங்கிருந்து முளைப்பாரி மற்றும் மதுக்குடங்கள் தலையில் சுமந்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து மாணிக்கநாச்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மன் குளத்தில் கரைத்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்டரமாணிக்கம் நாட்டார்கள் செய்திருந்தனர்.

மேலும் தற்சமயம் அரசு ஆணையின்படி நோய் தொற்று பரவுவதை தவிர்க்க திருவிழா போன்ற மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் கூட அனுமதி இல்லாத நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் 5 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News