செய்திகள்
கவுல்பாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் பேசியபோது எடுத்த படம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

Published On 2020-01-27 18:17 GMT   |   Update On 2020-01-27 18:17 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கவுல்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசு தினத்தையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கவுல்பாளையம் ஊராட்சியில் பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் 2020-21-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் இடையே அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், ‘எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். விளையாட்டு உபகரணங்கள் வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாலிங்கம், தாசில்தார் பாரதிவளவன், நொச்சியம் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கவுல்பாளையம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி(கிராம ஊராட்சி) முரளிதரன் தலைமை தாங்கினார். கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளர் உள்ளிட்டோர் 100 நாள் வேலை திட்டம், அரசின் நிதி உதவியுடன் வீடுகளில் கழிவறை கட்டும் திட்டம், தொகுப்பு வீடு கட்டுதல் ஆகியவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அதிகாரி முரளிதரனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, அவரை சிறைபிடித்து வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன் சென்று, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சமாதானமடைந்தனர். இதனால் கவுல்பாளையத்தில் காலையில் தொடங்கிய கிராம சபை கூட்டம் மாலை வரை நீடித்தது.
Tags:    

Similar News