உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அருகே வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி பணம்- செல்போன் பறிப்பு

Published On 2022-01-15 07:54 GMT   |   Update On 2022-01-15 07:54 GMT
கத்தியால் குத்தி சஜல் மண்டலிடமிருந்த ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்த மங்கலம் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சஜல் மண்டல் (வயது36) என்பவர் குடியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது  மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சஜல் மண்டலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளனர். அதனை அவர் கொடுக்க மறுத்தார். உடனே மூன்று பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த சஜல் மண்டலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் மங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

 தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மணிகண்டன் (32), சக்திவேல் (24), ரவிக்குமார் (27) என்பதும் இவர்கள் 3 பேரும் சேர்ந்துதான் வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி பணம், செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News