செய்திகள்
கோப்புபடம்

விவசாய சங்கங்கள் சார்பில் 8 இடங்களில் சாலை மறியல் - 349 பேர் கைது

Published On 2020-09-26 10:48 GMT   |   Update On 2020-09-26 10:48 GMT
வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி விவசாய சங்கங்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 349 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தேனி மாவட்டத்தில் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று தேனி, கம்பம், கோம்பை, சின்னமனூர், போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு ஆகிய 8 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில் கம்யூனிஸ்டு கட்சிகளின் விவசாய சங்கங்கள், எஸ்.யு.சி.ஐ. விவசாயிகள் சங்கம் மற்றும் காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தேனியில் விவசாயிகள் பள்ளிவாசல் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு சிலை சிக்னல் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மறியலுக்கு முன்பு நடந்த ஊர்வலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தர்மர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து தேனியில் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பத்தில் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் முன்பு சாலை மறியல் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் போத்திராஜ், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் முருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நகர செயலாளர் அறிவழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். பின்னர் அவர்கள் வேளாண் மசோதா நகல்களை தீயிட்டு எரித்தனர். இதையடுத்து கம்பம் தெற்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 53 பேரை கைது செய்தனர்.

கடமலைக்குண்டுவில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு விவசாய அணி ஒன்றிய செயலாளர் போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் தயாளன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டதாக 16 பேரை கைது செய்தனர்.

பெரியகுளம் காந்தி சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு விவசாயிகள் சங்க செயலாளர்கள் முருகன், சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், மன்னர்மன்னன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது விவசாயி ஒருவர் தூக்கில் தொங்குவது போல நடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதையடுத்து சாலை மறியல் செய்த 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

போடியில் தேவர் சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட 42 பேரை போலீசார் கைது செய்தனர். கோம்பை பஸ் நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர் சீத்தாராமன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட மொத்தம் 349 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இந்த மறியல் நடந்த இடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News