செய்திகள்
தமிழக அரசு

நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள்- அரசு எச்சரிக்கை

Published On 2021-03-24 02:08 GMT   |   Update On 2021-03-24 02:08 GMT
கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் இன்னும் வேகமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சில மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்து வருவதுபோல் தமிழ்நாட்டில் அதிகரிக்காமல் தடுப்பதற்கும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் அரசு பன்முக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா நோயின் தற்போதுள்ள நிலைப் பற்றியும், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு பிரிவு தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் பீட்டர், தேசிய தொற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் டாக்டர் பிரகதீப் கவுர், உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார், மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னையிலுள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதன் விவரம் வருமாறு:-

* தற்போது மக்களிடையே கொரோனா பற்றிய தொய்வு காணப்படுகிறது. இதனால் அவர்களிடையே பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பு பழக்கங்களை பின்பற்றுவது முற்றிலும் குறைந்துள்ளது. இதுதான் மீண்டும் தொற்று அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம்.

* ஏற்கனவே பரிந்துரைத்த பொது சுகாதார வழிமுறைகளை இன்னும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

* முக கவசம் கட்டாயம் அணிவது மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதை கண்காணிக்க வேண்டும்.

* தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் இன்னும் வேகமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட விரிவான விவாதத்திற்கு பிறகு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள இணையவழி, டிஜிட்டல் வகுப்புகளுக்கான ஆணைகளைத் தொடர்ந்து மருத்துவம், செவிலியம், விவசாயம், கால்நடை, சட்டம் மற்றும் இதர படிப்புகளை பொறுத்தமட்டில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தவிர இறுதி ஆண்டிற்கு முன் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இணையவழி முறையில் வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் நிலையான வழிமுறைகளை கடைபிடித்து அந்தந்த பல்கலைக்கழகங்களின் முடிவிற்கு ஏற்ப 31-ந் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கவேண்டும்.

* ஏற்கனவே உள்ள அரசாணையில் உள்ளபடி உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மொத்த இருக்கைகளில் 50 சதவீத இடங்களுக்கு மிகாமல் அல்லது அதிகபட்சமாக 600 பேருக்கு மிகாமல் நிலையான வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து நிகழ்ச்சிகள் அல்லது கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். இதனை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் உள்ளரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கணினி சார்ந்த அலுவலங்களில் பணிபுரியும் 100 சதவீத தொழிலாளர்கள், அலுவலர்கள், வகுக்கப்பட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வயதுவரம்பிற்கு ஏற்றவாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர ஊக்குவிக்க வேண்டும்.

பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்வோர் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும்.

* வணிக வளாகங்களில் உள்ள உணவுக் கூடங்கள், திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தளர்வின்றி பின்பற்றவேண்டும். இந்த தொற்று அதிகரித்து வரும் வேளையில் இதில் ஏதேனும் விதி மீறல்கள் காணப்பட்டால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.

* மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், தொழிற்சாலைகள், கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக அந்த பகுதிகளில் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களிலும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு மாதிரி எடுக்கும் “நடமாடும் மாதிரி சேகரிக்கும் மையங்கள்” அமைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது.

* மாவட்டங்களில் “கொரோனா கவனிப்பு மையங்கள்” அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

* அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள், மாநகரங்கள் மற்றும் பகுதிகளில் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த இந்த வல்லுநர் குழு வழிவகுக்கும்.

மத்திய அரசின் பரிந்துரைப்படி, முன்னிலைப் பட்டியலில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் சேர்க்கலாம் என்றும் அவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் தடுப்பூசி போடலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த நோய்த் தொற்று அதிகரித்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால், தாக்கம் குறைந்து வரும் சூழ்நிலையை உருவாக்க கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

நோய் தடுப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News