செய்திகள்
கோப்பு படம்

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.52 லட்சம் மோசடி - 4 பேர் மீது வழக்கு

Published On 2019-11-06 10:04 GMT   |   Update On 2019-11-06 10:04 GMT
திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் அங்கேரிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகசாமி(வயது 62).

இவர் அப்பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் வெளிநாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தநிலையில் பனியன் ஆடைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் சரக்கு ஏற்றுமதி நிறுவன ஊழியரான திருப்பூர் பங்களா பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்த ராயர் ஆனந்த் மூலமாக ஆடைகளை முருகசாமி ரஷ்யநாட்டில் உள்ள ஒருநிறுவனத்துக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைத்துள்ளார்.

ஆடைகள் அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பல் மூலமாக ரஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஆடைகள் ரஷ்யாவுக்கு போய் சேர்ந்த பின்னரும் பனியன் சரக்குக்கான பணம் முருகசாமிக்கு வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. சரக்குஅனுப்பி வைக்கும் நிறுவனத்தினர் கூட்டு சேர்ந்து ரூ.52 லட்சத்தை மோசடி செய்து விட்டது முருகசாமிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து முருகசாமி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு ஏற்றுமதி நிறுவன ஊழியரான ராயர் ஆனந்த் மற்றும் அரியானாவில் உள்ள சரக்கு ஏற்றுமதி நிறுவன மேலாளர் ஹிமான்சு சுபாஷ் சந்திரா பன்ட், மற்றும் அதே நிறுவனத்தின் தூத்துக்குடி கிளை மேலாளர் மணிகண்டன், ரஷியாவில் உள்ள பனியன் வர்த்தகர் போரீஸ் அஸ்ட்பிராட் ஆகிய 4 பேர் சேர்ந்து முருகசாமியின் நிறுவனத்தின் பெயரில் ஆவணங்கள் எதுவும்இல்லாமல் சரக்குகளை முறைகேடாக விற்பனை செய்து ரூ.52 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போரீஸ் அஸ்ட்பிராட், ஹிமான்சு சுபாஷ் சந்திரா பன்ட், மணிகண்டன், ராயர் ஆனந்த் ஆகிய 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News