செய்திகள்
மழை

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு- நாகர்கோவிலில் 20 மில்லிமீட்டர் பதிவு

Published On 2021-10-28 09:05 GMT   |   Update On 2021-10-28 09:05 GMT
குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.
நாகர்கோவில்:

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பின.

பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டதாலும், மலைப்பகுதிகளில் விடாமல் மழை பெய்ததாலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திற்பரப்பு அருவியில் ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடலோர மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களிலும் மழை பொழியும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மதியம் மற்றும் மாலை நேரங்களில் நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்தமழை கொட்டியது. இரவில் பல இடங்களில் மழை பொழிந்தது. நாகர்கோவில் பகுதியில் இரவு முதல் இன்று காலை வரை அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது.

இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது. நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக பேச்சிப்பாறையில் 11.2 மில்லிமீட்டரும், சிற்றாறு 1-ல் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்திருக்கிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

பாலமோர் - 9.4
பூதப்பாண்டி - 8.2
மயிலாடி - 8.2
சிற்றாறு 2 - 5.8
களியல் - 5.2
கொட்டாரம் - 3.8
கன்னிமார் - 2.8
குருந்தன்கோடு - 2.6
மாம்பழத்துறையாறு - 2.4
ஆனைக்கிடங்கு - 2.2

குழித்துறை மற்றும் பெருஞ்சாணியில் 2 மில்லிமீட்டரும், புத்தன் அணை மற்றும் முள்ளங்கினாவிளையில் 1.8 மில்லிமீட்டரும், தக்கலை மற்றும் கோழிப்போர் விளையில் ஒரு மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. முக்கடல் அணை, குளச்சல், இரணியல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யவில்லை.

48 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு 535 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. அணையின் நீர்மட்டம் 43.64 அடியாக இருக்கிறது. 77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணைக்கு 595 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 72.29 அடியாக இருக்கிறது.

நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கிவரும் முக்கடல் அணை மற்றும் மாம்பழத்துறையாறு, பொய்கை, சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகிய அணைகளுக்கு மிகவும் குறைந்தஅளவு தண்ணீரே வருகிறது. முக்கடல் அணை முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சியான தட்டவெப்ப நிலையே நிலவி வருகிறது.

Tags:    

Similar News