வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-02-25 04:06 GMT   |   Update On 2022-02-25 04:06 GMT
பிரசித்திப் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கைலாசகிரி மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவிலில் பக்தகண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்ச பூத தலங்களில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வாயு தலமாக விளங்குகிறது. இக்கோவில் தென் கயிலாயமாக அழைக்கப்படுகிறது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என்பதற்கு ‘ஸ்ரீ’ என்றால் சிலந்தி, ‘காள’ என்றால் 5 தலை பாம்பு, ‘ஹஸ்தி’ என்றால் யானை என்பது பொருளாகும்.

இந்த 3 ஜீவராசிகளும் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டதால், பக்தியை மெச்சிய சிவன் தன்னுடன் ஐக்கியப்படுத்தி கொண்டார். இதனால் கோவிலின் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிவன் பெயராலேயே ஊரின் பெயரும் ஸ்ரீகாளஹஸ்தி என விளங்குகிறது.

சுயம்பு மூலவரான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசிக்க வந்த ஆதிசங்கரர், மூலவர் ஞானப்பிரசுனாம்பிைக தாயார் எதிரில் ‘ஸ்ரீசக்ரம்’ பிரதிஷ்டை செய்துள்ளார். அப்போது கோவிலில் படிக லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்துள்ளார். மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சர்ப்ப வடிவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண தலமாக திகழ்கிறது.

பிரசித்திப் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கைலாசகிரி மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவிலில் பக்தகண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இருந்து உற்சவர் பக்தகண்ணப்பர் சிறப்பு அலங்காரத்தில் கைலாசகிரி மலைக்கு ஊர்கலமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உற்சவருக்கு சிறப்புப்பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க பிரதான அர்ச்சகர்கள் கொடியேற்றினர். அதன் பிறகு நைவேத்தியம், தீபாராதனை நடந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன் ரெட்டி தம்பதியர், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News