செய்திகள்
உச்ச நீதிமன்றம்

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2020-11-27 06:23 GMT   |   Update On 2020-11-27 12:57 GMT
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஒடிசா, தமிழகம், உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 டாக்டர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, முதுகலை படிப்பில் அரசு டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்குமானது, குறிப்பிட்ட பிரிவினருக்கானது இல்லை என்றும், இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்றும் கூறியது.

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின்படி இந்த 50 சதவீத இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்கப்படாது.
Tags:    

Similar News