ஆன்மிகம்
சூரசம்ஹாரம்

முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி

Published On 2019-11-02 04:38 GMT   |   Update On 2019-11-02 04:38 GMT
குமரி மாவட்ட முருகன் கோவில்களில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில்ஆண்டு தோறும் சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அப்போது, சூரனை வதம் செய்யும் முருகப்பெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில் நாகர்கோவில் நாகராஜா கோவில், மருங்கூர், வேளிமலை, தோவாளை செக்கர்கிரி, ஆரல்வாய்மொழி, வெள்ளிமலை, கன்னியாகுமரி தேரிவிளை குண்டலில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள ஸ்ரீபாலமுருகன் சன்னதியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழாவின் முதல் நாளில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு கால்நாட்டு மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு தன்வந்திரி ஹோமம், 11 மணிக்கு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

6-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், மதியம் 1.30 மணிக்கு தீபாராதனை, 1.45 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சீர் செய்தல், 2 மணிக்கு வேல் வாங்க புறப்படுதல், மாலை 4.30 மணிக்கு சுவாமி சூரனை வதம் செய்ய புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு சுவாமி ரதவீதிகளில் பவனி வருதல் நடக்கிறது. 7-ம் திருவிழாவன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மங்கள தீபாராதனையும் நடைபெற உள்ளது.

வெள்ளிமலையில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதே போல் கடந்த 28-ந் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கி, நடந்து வருகிறது. முதல் நாளன்று அதிகாலை கணபதி ஹோமம், கிரிவலம், அதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார்கள்.

2-வது நாள் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி, கிரிவலம், பகல் கந்தபுராண தொடர் விரிவுரை நடந்தது. இதே போல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-வது நாளான இன்று நடக்கிறது. இதனையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், காலை 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு கந்த புராண தொடர் விரிவுரை, மதியம் 12.30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளுகிறார். 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், தீபாராதனை, சாமி மயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் கடந்த 28-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. முதல் நாளில் கணபதி ஹோமம், அபிஷேகம், பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு செக்கர்கிரி வேலவன் ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை, வேலவன் பச்சை சாத்தி எழுந்தருளுதல், மதியம் 1 மணிக்கு செக்கர்கிரி மலையில் சிறப்பு அன்னதானம், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை கச்சேரி நடைபெறுகிறது.

ஆரல்வாய்மொழி வவ்வால்குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 7 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி திருவிழா நடந்து வருகிறது. தினமும் பல்வேறு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு வவ்வால்குகை பாலமுருகன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுதல், 6.30 மணிக்கு சூரசம்ஹாரம், தொடர்ந்து வாணவேடிக்கை, இரவு சிறப்பு அபிஷேகம், பாலமுருகன் மயில் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை காலை 10 மணிக்கு தீபாராதனை, திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முக பெருமாள் மற்றும் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.

இதேபோல் கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. சூரசம்ஹாரத்தையொட்டி இன்று காலை 8 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 10 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளுதலும், மதியம் 2 மணிக்கு சூரன் பவனியும் நடக்கிறது.

கோவிலில் இருந்து புறப்படும் சுவாமி பவனி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்தகுளம் சந்திப்பு வரை சென்று திரும்பி மீண்டும் கோவில் பழத்தோட்டம் சந்திப்பு வழியாக முருகன்குன்றம் அடிவாரத்தை சென்றடைகிறது. அங்கு மாலை 6 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News