செய்திகள்
கவர்னர் கிரண்பேடி எரமுடி அய்யனாரப்பன் கோவிலில் பூஜை செய்து வழிபட்ட போது எடுத்த படம்.

நீர்-நிலைகளை பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள்

Published On 2019-09-14 09:28 GMT   |   Update On 2019-09-14 09:28 GMT
நீர் நிலைகளை பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகூர்:

வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் மற்றும் ஏரி- குளங்களை தூர் வாரும் பணிகளை புதுவை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்து வருகிறார்.

அதுபோல் தூய்மை இந்தியா மற்றும் பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் நீர் ஆதாரத்தை பெருக்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாகூர் ஏரி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடி இன்று காலை 7 மணிக்கு பாகூர் ஏரி பகுதிக்கு வந்தார்.

அவரை தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் சுமார் 200 பேர் வரவேற்றனர். பின்னர் கவர்னர் கிரண்பேடி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்து அரங்கனூர் வரை சுமார் 3½ கிலோ மீட்டர் தூரம் மாணவர்களுடன் நடந்தே சென்றார்.

விழிப்புணர்வு ஊர்வலம் அரங்கனூரில் உள்ள பாகூர் ஏரி நீர் வெளியேற்றம் பகுதியை அடைந்தது. பின்னர் ஏரியின் நினைவாக அமைக்கப்பட்ட சிங்காரி- பங்காரி சிலைகளை சுத்தம் செய்து மஞ்சள்- குங்குமம் இட்டு அந்த சிலைக்கு கவர்னர் கிரண்பேடி மரியாதை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:-

புதுவையில் நீர் ஆதாரத்தை பெருக்க ஏரி- குளங்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. இதற்கு பெண்களின் பங்கு அதிகமாகும்.

அது போல நீர் ஆதாரத்தை பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும். தற்போது பெய்து வரும் மழையில் பாகூர் ஏரி நிரம்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அதுபோல் புதுவையில் உள்ள மற்ற ஏரிகளும் நிரம்ப பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மேலும் பொங்கல் பண்டிகையை சிங்காரி- பங்காரி சிலை அருகே சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் இங்குள்ள சாலையை செப்பனிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி பேசினார்.

இதனை தொடர்ந்து அங்கு மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது ஒரு மூதாட்டி கவர்னர் கிரண்பேடியை வாழ்த்தி நாட்டுப்புற பாடல் பாடினார்.

அதனை கவர்னர் கிரண்பேடி ரசித்து கேட்டார். பின்னர் கவர்னர் கிரண்பேடி பாகூர் ஏரியின் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய எரமுடி அய்யனாரப்பன் சாமிக்கு பூஜை செய்து வழிபட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது கவர்னரின் செயலாளர் சுந்தரவடிவேலு, தனி செயலாளர் தேவநீதிதாஸ் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் மகாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் பெட்ரோ குமார், செயற்பொறியாளர் தீனதயாளன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் (பொறுப்பு) மனோகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News