சிறப்புக் கட்டுரைகள்
துவிபாத பீடாசனம்

முதுகுத்தண்டை திடப்படுத்தும் முத்திரை

Published On 2022-01-19 08:16 GMT   |   Update On 2022-01-19 08:16 GMT
இரு கால் விரல்களை நன்கு முன்னாள் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் கால் விரல்களை பின்னால் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும், இதே போல் இரண்டு முறைகள் செய்யவும்.


1. கால் பாதங்கள் வீக்கமின்றி நன்கு செயல்பட முத்திரைகள்

மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவை தான். கால் பாதம், கால் விரல்கள் நன்கு இயங்கினால் தான் நாம் நடக்க முடியும். நமது எல்லா செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும்.

பொதுவாக நிறைய நபர்களுக்கு கால் வலி, உள்ளங்கால் வலி, பாத வீக்கம், கால் ஆணி, விரல்கள் நடுவில் புண் முதலியவை வரும். இவை வராமல் தடுக்கும் எளிய யோகா பயிற்சியை தினமும் செய்தால் வளமாக வாழலாம்.

சுமண முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கவும். கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் கைவிரல்களை அப்படியே மாற்றி இரு கைகளையும் சேர்க்கவும். கட்டைவிரல் தவிர மற்ற நான்கு விரல்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். படத்தைப் பார்க்கவும். இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் இருக்கவும். காலை/மாலை இருவேளைகள் பயிற்சி செய்யவும்.


எளிய நரம்பு பயிற்சி: விரிப்பில் நேராக இரு கால்களையும் நீட்டி அமரவும். இரு கைகளை பக்கவாட்டில் இடுப்புப் பக்கத்தில் வைக்கவும். உள்ளங்கை தரையில் இருக்கட்டும்.

இரு கால் விரல்களை நன்கு முன்னாள் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் கால் விரல்களை பின்னால் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும், இதே போல் இரண்டு முறைகள் செய்யவும்.

பின் ஒரு கால் பக்கவாட்டில் படத்தில் உள்ளது போல் வலப்பக்கம் வளைக்கவும். வலது காலை தொய்வாக போட்டு இடது காலை இழுத்து விடவும். பத்து வினாடிகள் இருக்கவும். அதேபோல் இடப்பக்கம் செய்யவும். பின் சுழற்சியாக செய்யவும். படத்தை பார்க்கவும்.

உணவு முறை:அதிக காரம், புளிப்பு, உப்பு தவிர்க்கவும். பூசணிக்காய், சுரைக்காய் உணவில் எடுத்துக் கொள்ளவும். கீரைகளில் முருங்கைக்கீரை, பசலை கீரை, மணத்தக்காளி, வல்லாரை கீரை, முடக்கத்தான் கீரை எடுத்துக் கொள்ளவும்.மாதம் இருமுறை மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை எடுத்துக் கொள்ளவும்.

வாரம் ஒரு முறை கல் உப்பு ஒரு டப்பில் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் கால் பாதங்களை தண்ணீரில் வைத்து ஐந்து நிமிடம் இருக்கவும். பின் கால்களை சாதாரண தண்ணீரில் கழுவவும்.

2. முதுகுத்தண்டு திடமாகும் முத்திரைகள்:

மனிதனின் ஆரோக்கியம் அவனது முதுகு தண்டை சார்ந்துள்ளது. முதுகுத் தண்டுவடத்திற்கும் உடலின் உள் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

*அடிமுதுகு கோனாடு சுரப்பியை சார்ந்தது. அடிமுதுகு வலி வந்தால் சிறுநீரகம், சிறுநீரகப்பைக்கு சக்தி ஓட்டம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

நடுமுதுகு வலி வந்தால் சிறுகுடல், பெருங்குடல் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம்.

கழுத்து முதுகுவலி வந்தால் நுரையீரல், இதயம் சரியாக இயங்கவில்லை. அப்பகுதியில் சக்தி ஓட்டம் குறைவு என்று அர்த்தம்.

எனவே நாம் முதுகுத்தண்டை திடப்படுத்த முத்திரைகள் செய்தால் அதை சார்ந்த உள் உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

அனுசாசன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். ஒரு பத்து வினாடிகள். பின் கண்களை திறக்கவும்.


சுண்டுவிரல், மோதிர விரல் நடுவிரலை உள்ளங்கைக்குள் மடக்கி கட்டை விரலை மோதிர விரலில் படும்படி வெளியில் வைக்கவும். ஆள்காட்டி விரல் படத்தில் உள்ளதுபோல் நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களில் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.

எப்பொழுதும் நிமிர்ந்து உட்கார கற்றுக் கொள்ளவும். அதிக காரம், புளிப்பு, உப்பு தவிர்த்து சாத்வீகமான உணவை எடுக்கவும்.

3. தோல்கள் நன்கு செயல்பட

மனித உடல் இயக்கம் பற்றி ஆராயும் பொழுது நமது உடலில் அனைத்து உறுப்புகளும் முக்கியமானது தான். அதில் இறைவன் அனைத்து உறுப்புகளையும் உள்ளே வைத்து எந்த ஒரு தையலும் இல்லாமல் தோலால் மூடி அழகாக படைத்துள்ளான். இந்த தோல் தசைகளின் மூலமாக பிராண சக்தி உடலுக்கும் செல்கின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு தசைகள் மிக முக்கியமானதாகும். பிரபஞ்சத்தின் சக்திகள். பிராண ஆற்றல் தசைகளின் மூலம் உள்ளே செல்லும். அதுபோல் உடல் கழிவுகள் வியர்வையாக தசைகளின் வழியாக வெளியே வரும். நல்ல பிராணன் உள்ளே செல்வதற்கும், கழிவுகள் வெளியே வருவதற்கும் தசைகளின் இயக்கம் நன்றாக இருக்க வேண்டும்.

உடல் உள் உறுப்புகளில் ஏதேனும் சரியாக இயங்கவில்லை என்றாலும் தோல் தசைகளில் அரிப்பு, புண் ஏற்படும்.

கணையம் நன்றாக இயங்கவில்லை என்றால் தோல்களில் அரிப்பு, புண் ஏற்படும், ஆறாமல் இருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் தசைகள் நன்கு இயங்க கீழே குறிப்பிட்ட முத்திரையை பயிற்சி செய்யவும்.

வருண முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் சுண்டுவிரல் பெருவிரல் நுனியை இணைக்கவும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இருகைகளிலும் செய்யவும். காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

குளியல்:தினமும் காலை / மாலை இருவேளை குளிக்கவும். சோப்பிற்கு பதில் பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு தேய்த்து குளிக்கவும்.வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்.

ஆதி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரலை உள்ளங்கையில் வைத்து மீதி நான்கு விரல்களையும் படத்தில் உள்ளது போல் மடித்து இரு கைகளிலும் செய்யவும். இந்த முத்திரையில் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

தியானம்: விரிப்பில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். மெதுவாக மூச்சை இருநாசி வழியாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும். மூச்சை வெளிவிடும்பொழுது நமது உடல், மனம் அதிலுள்ள டென்‌ஷன் வெளியேறுவதாக எண்ணவும். உடல் வெளி தசைகள் முழுக்க நல்ல பிராணக் காற்று கிடைப்பதாக எண்ணவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் நெற்றி புருவ மத்தியில் 5 நிமிடங்கள் தியானிக்கவும்.

4.தலைமுடி உதிராமல் நன்கு வளர அர்த்த சிரசாசனம்: தலைமுடி உதிராமல் நன்கு வளர ஏற்கனவே முத்திரை பார்த்தோம். யோகாசனத்தில் அர்த்த சிரசாசனம் செய்ய வேண்டும்.

செய்முறை: விரிப்பில் அமரவும். ஒவ்வொரு காலாக மடித்து முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். பின் உச்சந்தலை தரையில் படும்படி வைத்து இருகைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்து மெதுவாக உடலை குன்று போல் உயர்த்தவும். சாதாரண மூச்சில் பதினைந்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் மூன்று முறைகள் காலை / மாலை பயிற்சி செய்யவும்.

5.மூளை செல்கள் நன்கு இயங்க துவிபாத பீடாசனம்: விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால் பாதங்களை இடுப்பு பக்கத்தில் மடித்து வைக்கவும். இரு கைகளை தலைக்கு பின்பு நேராக நீட்டவும் மூச்சை இழுத்து கொண்டே இடுப்பை படத்தில் உள்ளது போல் உயர்த்தவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் இருபது வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக இடுப்பை தரையில் வைக்கவும். மூன்று முறைகள் செய்யவும்.

Tags:    

Similar News