செய்திகள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

Published On 2021-04-06 10:52 GMT   |   Update On 2021-04-06 10:52 GMT
குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்கு சாவடிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்று கையுறை அணிந்தபடி வாக்களித்தார்.

குனியமுத்தூர்:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாகவே தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்கு சாவடிக்கு இன்று காலை தனது மனைவியுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்தார். பின்னர் வாக்கு சாவடிக்குள் சென்று கையுறை அணிந்தபடி வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

இந்த தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்- அமைச்சராக பதவியேற்பார். நான் தேர்தல் விதிமீறல்கள் எதையும் மீறவில்லை. விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்பட்டேன்.

தி.மு.க. வேட்பாளர் என்னை தகுதி நீக்க செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன். அப்படி பார்த்தால் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில், ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட 5 வேட்பாளர்களைத்தான் முதலில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் தான் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க.வினர் தோல்வி பயத்தாலேயே இவ்வாறான புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News