உள்ளூர் செய்திகள்
காசாங்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.

பட்டுக்கோட்டையில் குளத்தில் 3 நாட்களாக செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்

Published On 2022-01-12 10:11 GMT   |   Update On 2022-01-12 10:11 GMT
பட்டுக்கோட்டையில் காசாங்குளத்தில் 3 நாட்களாக செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகர மையப் பகுதியில் உள்ளது காசாங்குளம். இந்த குளத்தின் எதிர்புறம் சிவன் கோவில், ஓம் சக்தி கோவில், பெருமாள் கோவில் மற்றும் அனுமன் கோவில் மற்றும் குளத்தின் எதிர்புறம் நகராட்சி அலுவலகம் உள்ளது.

மேலும் குளத்தை சுற்றி வணிக நிறுவனங்கள் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்நிலையில் இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் இருந்த நிலையில் தற்போது கடந்த 3 தினங்களாக மீன்கள் அதிக அளவு செத்து குளத்திலேயே மிதந்து கிடக்கிறது.

மீன்கள் இறந்து குளத்திலே மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் மற்றும் அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நகராட்சி எதிர்புறம் உள்ள குளத்திலேயே மீன்கள் செத்து கிடப்பதை கூட சுத்தம் செய்யாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

எனவே உடனடியாக குளத்தில் இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி குளத்தை சுத்தம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News