செய்திகள்
மின் கட்டணம்

கர்நாடகத்தில் மின் கட்டணம் ‘திடீர்’ உயர்வு: ஒரு யூனிட்டுக்கு 30 காசுகள் அதிகரிப்பு

Published On 2021-06-10 03:16 GMT   |   Update On 2021-06-10 03:16 GMT
மின்சார வினியோக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1,819 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிதி பற்றாக்குறையை இந்த கட்டண உயர்வு மூலம் அடுத்த ஓராண்டுக்குள் ஈடுகட்ட வேண்டியுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் மின்சார வினியோக நிறுவனங்கள் நிர்வாக செலவுகள் மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரித்து இருப்பதால் மின்சார கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில் கர்நாடக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

“கர்நாடகத்தில் உள்ள மின்சார வினியோக நிறுவனங்கள் மின் கட்டணத்தை சராசரியாக 17.31 சதவீதம் உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தன. அவர்களின் கோரிக்கைகளை நாங்கள் பரிசீலித்து முடிவு எடுத்துள்ளோம். அதன்படி சராசரியாக ஒரு யூனிட்டுக்கு மின்கட்டணத்தை 30 காசுகள் உயர்த்துவது என்று தீர்மானித்துள்ளோம்.

இந்த மின் கட்டண உயர்வு முன்கூட்டியே அதாவது கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர். அதனால் இந்த ஏப்ரல், மே மாதங்களுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு மின்சார வினியோக நிறுவனங்கள் வட்டி விதிக்கக்கூடாது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தை வருகிற அக்டோபர், நவம்பர் மாத கட்டணத்துடன் சேர்த்து வசூலித்துக் கொள்ளலாம்.

ஆண்டுதோறும் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கு முன்பே கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் கர்நாடகத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடந்ததால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. கொரோனா பரவல் காரணமாக அரசு அனைத்து துறைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இவற்றின் காரணமாக சரியான நேரத்தில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை.

மின்சார வினியோக நிறுவனங்களுக்கு மின் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிர்வாக செலவு, முதலீட்டு திட்ட செலவு, அதற்காக பெறப்படும் கடன்களை அடைக்க ஆகும் செலவு ஆகியவற்றின் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சார வினியோக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1,819 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிதி பற்றாக்குறையை இந்த கட்டண உயர்வு மூலம் அடுத்த ஓராண்டுக்குள் ஈடுகட்ட வேண்டியுள்ளது. தொழில் நிறுவனங்கள் (எச்.டி.) காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அந்த அபராதம் கடந்த 2020-ம் ஆண்டு கைவிடப்பட்டது.

அந்த அபராத விலக்கு இந்த ஆண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் கூடுதலாக உற்பத்தி ஆகும் மாதங்களில் தொழில் நிறுவனங்களுக்கு யூனிட் ரூ.6 தள்ளுபடி விலையில் வழங்கப்படும். ஏழை-நடுத்தர மக்கள் அதிகளவில் மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் முதல் நிலை 30 யூனிட் என்ற அளவில் இருந்து 50 யூனிட்டாக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மின் கட்டணம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் எல்.இ.டி. தெருவிளக்குகளை அமைத்தால் ஒரு யூனிட் மின்சார பயன்பாட்டிற்கு 105 காசுகள் தள்ளுபடி அளிக்கப்படும். பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கழகத்திற்கு சலுகை விலையில் தற்போது யூனிட் ரூ.5.20 என்ற அளவில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த மெட்ரோ ரெயிலை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மெட்ரோ ரெயில் கழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை உயர்த்தவில்லை.

வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரு உள்பட நகர பகுதிகளில் தற்போது 50 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.4-ல் இருந்து ரூ.4.10 ஆகவும், 51 யூனிட்டில் இருந்து 100 யூனிட் வரை ரூ.5.45-ல் இருந்து ரூ.5.55 ஆகவும், 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரை ரூ.7-ல் இருந்து ரூ.7.10 ஆகவும், 200 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு ரூ.8.05-ல் இருந்து ரூ.8.15 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

விவசாய பம்புசெட்டுகள் உள்பட பல்வேறு திட்டங்கள் மூலம் இலவச மின்சார வழங்கும் திட்டங்களுக்கு கர்நாடக அரசு ரூ.13 ஆயிரத்து 71 கோடி மானியம் வழங்குகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் மிகுந்த நெருக்கடியில் சிக்கியுள்ளனர். ஏழை-நடுத்தர மக்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். சிறிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அந்த தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டள்ளனர். பொதுமக்கள் நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில் கர்நாடக அரசு, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
Tags:    

Similar News