செய்திகள்
டிராவிட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெல்லும் - டிராவிட் சொல்கிறார்

Published On 2021-05-09 20:17 GMT   |   Update On 2021-05-09 20:17 GMT
இங்கிலாந்து மண்ணில் கடைசியாக 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) வென்றது.
மும்பை:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் 2-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.



இங்கிலாந்து மண்ணில் கடைசியாக 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) வென்றது. அதன் பிறகு 3 முறை இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி ஒவ்வொரு முறையும் டெஸ்ட் தொடரில் படுதோல்வியுடன் தான் தாயகம் திரும்பியிருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து தொடர் குறித்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்து அணி பந்து வீச்சில் பலம் வாய்ந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதல் அற்புதமானது. அவர்களிடம் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்தின் டாப் 6-7 பேட்ஸ்மேன்களை பார்த்தால் அதில் ஒருவர் உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். அவர் தான் ஜோ ரூட். இதே போல் பென் ஸ்டோக்சையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் சிறந்த ஆல்-ரவுண்டர். ஆனால் அவருக்கு எதிராக இந்தியாவில் நமது சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் அசத்தினார். இப்போதும் அவருக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என்று தோன்றுகிறது. இவர்கள் இடையிலான நீயா-நானா? மோதல் இந்த போட்டியில் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த தொடருக்காக இந்திய அணி சிறந்த முறையில் தயாராகும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதால் அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. சில வீரர்கள் ஏற்கனவே சில முறை இங்கிலாந்துக்கு சென்று விளையாடி இருக்கிறார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை இந்த முறை நிறைய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் இந்த தடவை டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அனேகமாக இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றலாம் என்று கருதுகிறேன்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு மாதம் முழுமையாக இருக்கிறது. எந்த ஒரு அணிக்கும் இது போன்று நீண்ட நாட்கள் தயாராவதற்கு வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் இந்தியாவுக்கு இது சாதகமான அம்சமாக இருக்கும். அணி சரியான கலவையில் அமைந்துள்ளது.

இங்கிலாந்தை பொறுத்தவரை அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு நீங்கள் எப்போதும் மதிப்பு கொடுத்தாக வேண்டும். இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் போது அங்குள்ள சூழல் சற்று வித்தியாசமாக இருக்கும். வானிலை மாறும் போது, 40-50 ஓவர்களுக்கு பிறகுகூட பந்து ஸ்விங் ஆகும்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.
Tags:    

Similar News