செய்திகள்
கோப்புப்படம்

கோவிஷீல்டு தடுப்பூசி விலை அரசுக்கு ரூ.292 ஆக நிர்ணயம் - சீரம் நிறுவனம் அறிவிப்பு

Published On 2021-01-04 22:14 GMT   |   Update On 2021-01-04 22:14 GMT
கோவிஷீல்டு தடுப்பூசி விலை அரசுக்கு ரூ.292 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன.

இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம், தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், ‘தடுப்பூசியின் விலை மலிவாகவும், அனைவரும் வாங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே இந்திய அரசு 3 முதல் 4 அமெரிக்க டாலர் (ரூ.219-292) என்ற மலிவு விலைக்கு தடுப்பூசியை பெறும். மிக அதிக அளவில் வாங்குவதால் இந்த விலைக்கு கொடுக்கப்படும்’ என்று கூறினார்.

இந்த தடுப்பூசியை பொறுத்தவரை இந்தியாவுக்கு முதலிலும், அடுத்ததாக தடுப்பூசி சர்வதேச கூட்டணி நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று கூறிய பூனவல்லா, அதைத் தொடர்ந்தே தனியார் சந்தைக்கு அனுப்பப்படும் எனவும், அங்கு இரு மடங்கு விலையில் விற்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்துக்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் எனவும், ஏப்ரலுக்குள் இது இரட்டிப்பாகும் எனவும் பூனவல்லா தெரிவித்தார். அதேநேரம் மத்திய அரசு ஜூலை மாதத்துக்குள் 30 கோடி டோஸ்கள் கேட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News