இந்தியா
தேவேகவுடா

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு மீண்டும் கொரோனா

Published On 2022-01-23 02:17 GMT   |   Update On 2022-01-23 02:17 GMT
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரு:

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக தொடர் இருமல் காரணமாக அவர் அவதிப்பட்டார். இதையடுத்து, தேவேகவுடா கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் நேற்று முன்தினம் இரவு தேவேகவுடா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தேவேகவுடாவுக்கு இருமல் மட்டும் இருப்பதாகவும், அவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதனால் யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேவேகவுடா, ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) 2-வது அலை வேகமாக பரவிய போதும், தேவேகவுடா கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தார்.

தற்போது 2-வது முறையாக அவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தேவேகவுடாவின் மருமகளும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி கடந்த 15-ந்தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News