ஆன்மிகம்
ஏழைகளின் பசியை போக்குவோம்

ஏழைகளின் பசியை போக்குவோம்

Published On 2021-04-19 03:09 GMT   |   Update On 2021-04-19 03:09 GMT
ரமலான் கூறும் இந்த தத்துவப் பண்பை நாம் அனைவரும் இந்த ரமலானில் மட்டுமின்றி, மற்ற எல்லாக்காலங்களிலும் கடைப்பிடித்து, மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்வோமாக, ஆமின்.
மகத்துவம் வாய்ந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் முவாஸாத்’ - ‘மனிதர்களுடன் கலந்துறவாடி, அவர்களின் சுக-துக்கங்களில் பங்கு கொள்கிற மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

ஒரு மனிதனுடைய இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் உண்மையான மனித நேயம். ஒருவரின் வாழ்வில் வெற்றியும், செல்வமும், செல்வாக்கும், பட்டமும், பதவியும், குவியும்போது அவரைத்தேடி அவரின் உதவியை நாடி, தேனீக்களைப் போன்று மக்கள் மொய்த்துக் கொண்டே இருப்பார்கள்.

அவருக்கு தோல்விக்கு மேல் தோல்வி வரும்போது, அவரின் செல்வாக்கும், சொல்வாக்கும் சரிந்து விழும்போது, அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள். இந்த நிலை சந்தர்ப்ப வாதம், அல்லது சுயநலம் என்று சொல்லப்படுகிறது.

இன்பத்திலும், துன்பத்திலும் உடன்பிறப்புகள் கூட உடனிருக்காத நிலையில், உற்ற துணையாக இருப்பவன்தான் உண்மையான தோழன். ஒருவரின் இன்பத்தில் சுகத்தை அனுபவிக்கும் நபர், அவரின் துன்பத்திலும் சோகத்தை சரிசமமாக பங்கெடுக்க வேண்டும்.

‘பிஷ்ருல் ஹாபி’ எனும் மகான் இருந்தார். அவரைக் காண அவரின் இல்லத்துக்கு ஒருவர் சென்றார். அது கடுங்குளிர்காலம். குளிர் போக்கும் கம்பளி ஆடை இருந்தும் அதை அந்த மகான் பயன்படுத்தாமல் குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த அந்த மனிதர் ‘ஏன் கம்பளி ஆடையை அணியாமல் இருக்கிறீர்கள்?’ என்றார்.

அதற்கு அந்த மகான், ‘குளிர்காலத்தில் ஏழைகளுக்கு கம்பளி ஆடைகள் வாங்கி கொடுக்க என்னிடம் வசதி இல்லை. எனவே அவர்கள் படும் துன்பத்தில் நானும் பங்கு கொள்கிறேன்’ என்றார். இத்தகைய மகத்தான தன்மையை புனித ரமலான் மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.

ஏழைகள் படும் பசியின் கொடுமையை தெரிந்து கொள்ளவே நோன்பு கடமையாக்கப் பட்டது. ஏழைகளின் பசிப்பிணியை நீக்குவதே நோன்பின் தத்துவம் ஆகும்.

நபி யூசுப் (அலை) காலத்தில் கடுமையான பஞ்சம். அப்போது அவரிடம் கொஞ்சம் உணவு இருந்தும் பட்டினி கிடந்தார். ஏன் தெரியுமா? பட்டினி கிடப்பவர்களின் பசியின் வேதனையை தானும் உணர வேண்டும் என்பதற்காக.

உமர் (ரலி) அவர்கள் தனியாக நோன்பு நோற்பார். ஆனால் ஏழைகள் இன்றி நோன்பு திறக்க மாட்டார்கள். இதை அவரது குடும்பத்தார் யாராவது தடுத்தால், அவர் அந்த இரவு முழுவதும் கவலையால் தூங்கமாட்டார். அதுபோல அவர் சாப்பிடும் போது யாசகர் எவரும் வந்து கேட்டால், உடனே எழுந்து சென்று தனது பங்கு உணவை எடுத்து வழங்கிடுவார். எனவே அந்நாளில் அவர் உண்ணாமல் நோன்பு நோற்பார்.

தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட பிறருக்கு முன்னுரிமை அளிப்பதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஏன்என்றால் ‘நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் உள்ளது’ என்று திருக்குர்ஆன் (94:6) குறிப்பிடுகிறது.

‘தன் அண்டை வீட்டான் பசித்திருக்க, தான் மட்டும் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மையான இறைவிசுவாசியாக ஆக முடியாது’ என்பது நபிமொழி ஆகும்.

ஏழைகளுடன் கலந்துறவாடி அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்குபெறும் மாதம் இந்த ரமலான் மாதமாகும். ரமலான் கூறும் இந்த தத்துவப் பண்பை நாம் அனைவரும் இந்த ரமலானில் மட்டுமின்றி, மற்ற எல்லாக்காலங்களிலும் கடைப்பிடித்து, மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்வோமாக, ஆமின்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

Tags:    

Similar News