செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரையில் புதிதாக 58 பேருக்கு கொரோனா

Published On 2021-04-05 10:54 GMT   |   Update On 2021-04-05 10:54 GMT
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 1,400 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வார்ட்டில் பணி செய்யும் பணியாளர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மதுரை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதுபோல், மதுரையிலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் மதுரையில் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 38 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 86 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று 7 பேர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்க ளுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 478 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக 50-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 500-ஐ நெருங்கி வருகிறது. இதனால் மதுரை மக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 1,400 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுபோல், கொரோனா வார்ட்டில் பணி செய்யும் பணியாளர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது. எனவே அனைவரும் மிகுந்த கவனமாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரும் நாட்களிலும் கொரோனாவின் தாக்கம் பெருமளவில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது முககவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை சரிவர கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.
Tags:    

Similar News