செய்திகள்
கோப்பு படம்

பெயில் ஆன மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண் - 300 ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ரத்து

Published On 2019-11-07 07:21 GMT   |   Update On 2019-11-07 07:21 GMT
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண் போட்டு தேர்ச்சி அடைய செய்த 300 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, அரசு ஆசிரியர் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாகவும் தனியார் பயிற்சி பள்ளி மூலமாகவும் அளிக்கப்படுகிறது.

600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு அதிக வரவேற்பு இல்லாததால் இப்பயிற்சியினை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

மிகவும் குறைந்த அளவில் தான் மாணவர்கள் சேர்ந்து கற்று வருகின்ற நிலை உள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். ஆசிரியர் தகுத்தேர்வினை (டெட்) எழுதி தேர்ச்சி பெற்றால் தான் அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்ற முடியும் என்ற நிலை கடந்த 8 வருடமாக உள்ளது. ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும்.

இந்த நிலையில் கடந்த2017-18 கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய 4 ஆயிரம் மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது கல்வித்துறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அனைத்து மாணவர்களும் எப்படி தேர்ச்சி பெற முடியும் விடைத்தாள் திருத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பணம் வாங்கி கொண்டு அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதையடுத்து விடைத்தாள்கள் மீண்டும் திருத்தப்பட்டன. தேர்வுத்துறை இயக்குனராக இருந்த வசுந்தரா தேவி உத்தரவின் பேரில் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு மீண்டும் திருத்தப்பட்டதில் மதிப்பெண் வித்தியாசம் இருந்தது தெரிய வந்தது. ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற 50 மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் 38, 40, 42 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 50 மதிப்பெண் போட்டு தேர்ச்சி அடைய செய்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விடைத்தாள் திருத்தம் செய்த 300 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தாங்கள் செய்தது தவறு என்று விளக்க கடிதம் கொடுத்தனர்.

இதில் 250 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்களும் 50 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்களும் அடங்குவார்கள். 17-பி பிரிவின் படி உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் கேட்டு பெறப்பட்ட கடிதத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் 2018-19 கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய 5 ஆயிரம் மாணவர்களில் 100 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பெரும்பாலானவர்கள் ஒற்றை இலக்கு மதிப்பெண்களை பெற்று இருந்தனர். மாணவர்கள் பெருமளவில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் 17-பி, பிரிவின் கீழ் 300 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாராகி வருகிறது. அதன்படி அவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து செய்தல் மற்றும் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-

38, 42, 44 மதிப்பெண் பெற்ற மாணவர்களை கருணை மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற வைப்பது வழக்கம். மேலும் மாணவர்களின் கற்றல் முறை குறித்த கேள்விக்கு விடை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் எழுதுவார்கள். அந்த அடிப்படையில் தான் மதிப்பெண் வழங்கப்பட்டது.

ஆனால் பணம் பெற்றுக்கொண்டு தேர்ச்சி பெற செய்ததாக கூறுவது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News