செய்திகள்
கொரோனா வைரஸ்

குமரி மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 7 ஆக குறைந்தது

Published On 2021-10-16 10:09 GMT   |   Update On 2021-10-16 10:09 GMT
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு மிகவும் குறைந்திருப்பது மாவட்ட சுகாதாரத்துறையினர் மற்றும் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நாகர்கோவில்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை குமரி மாவட்டத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏப்ரலில் தொடங்கிய பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. இதனையடுத்து அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியது.

கடந்த ஜூலை மாதம் முதல் தினசரி தொற்று பாதிப்பு மிகக்குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது சராசரியாக தினமும் 30-க்கு குறைவானவர்களே தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நேற்று(15-ந்தேதி) 7பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தக்கலை மற்றும் மேல்புறத்தில் தலா 2பேரும், தோவாளை, குருந்தன்கோடு மற்றும் முன்சிறையில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாகர்கோவில் நகரில் நேற்று யாரும் பாதிக்கப்படவில்லை. புதிதாக தொற்று பாதித்தவர்களில் 4பேர் ஆண்கள், 2பேர் பெண்கள், ஒரு சிறுவன் ஆகியோர் அடங்குவர். அவர்களையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 57,498 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வந்த போதிலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று ஒரேநாளில் 2,323பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 2,316 பேருக்கு பரிசோதனை முடிவு “நெகட்டிவ்” என்று வந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு மிகவும் குறைந்திருப்பது மாவட்ட சுகாதாரத்துறையினர் மற்றும் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Tags:    

Similar News