ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் மொட்டை அடிக்க அனுமதி

Published On 2020-09-11 05:45 GMT   |   Update On 2020-09-11 05:45 GMT
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் மொட்டை அடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமிகோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். முகூர்த்த நாட்களில் இங்கு 100 முதல் 300 திருமணங்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மொட்டையடித்து செல்வார்கள்.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் கடந்த 5 மாதமாக கோவில் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அரசின் உத்தரவின்படி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் கோவிலுக்குள் அமர்வதற்கும், விழுந்து சாமி கும்பிடுவதற்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் கடந்த 5 மாதமாக திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மொட்டை அடிக்க அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மொட்டை அடிப்பதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று போன்ற அறிவுரைகளை கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வருகிற 17-ந்தேதி முதல் பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் தொடங்குவதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்ற காரணத்தினால், இதற்கான மாற்று ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது.
Tags:    

Similar News