செய்திகள்
உடுமலை பகுதியில் பெய்த மழையால் தோட்டங்களுக்குள் வெள்ளம் புகுந்ததை படத்தில் காணலாம்.

மேகவெடிப்பால் உடுமலை பகுதியில் கொட்டி தீர்த்த மழை - வானிலை ஆய்வாளர்கள் ஆய்வு

Published On 2021-10-22 07:26 GMT   |   Update On 2021-10-22 07:26 GMT
சில மணி நேரத்தில், 150 மி.மீ.,க்கும் மேல் மழை பெய்ததால் பல ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாமல் வறண்டிருந்த ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள முக்கோணம், அந்தியூர், உடுக்கம்பாளையம், பாப்பனூத்து, சாளையூர், விளாமரத்துப்பட்டி சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் அதிக கன மழை பெய்தது.

சில மணி நேரத்தில், 150 மி.மீ.,க்கும் மேல் மழை பெய்ததால் பல ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாமல் வறண்டிருந்த ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உடுமலை - ஆனைமலை சாலையில் சாளையூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தும் பல இடங்களில் சாலைகளில் ஓடிய வெள்ள நீரால் போக்குவரத்து பாதித்தது. மேலும் விளைநிலங்களில் பல ஆண்டுகளுக்கு பின் மழை வெள்ள நீர் தேங்கியது.

உடுக்கம்பாளையம் - கொடுங்கியம் சாலையில் அபரிமிதமான வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் அடைப்பு ஏற்பட்டு கரை அரிக்கப்பட்டது. ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் நிரம்பி வழிந்தது.

முக்கோணம், பூலாங்கிணர் பகுதியில் வெள்ளை சோளம், காய்கறி சாகுபடி வயல்களில் வெள்ள நீர் தேங்கியது. அந்தியூர், பூலாங்கிணர் பகுதிகளில் தாழ்வான பகுதியிலிருந்த வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. 

ஒரு சில மணி நேரத்தில் அதிகளவு மழை பல ஆண்டுகளுக்கு பின் கொட்டியுள்ளதாகவும் இதனால் வறண்டு கிடந்த ஓடைகள், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள் குளிர்ந்தும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தும் உள்ளது.

கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பு காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர்கள், சமூகவலைதளங்களில், பதிவிட்டிருந்தனர். அந்த கிராமங்களில் மழை மானி இல்லாத நிலையில் மழையின் அளவு துல்லியமாக தெரியவில்லை. 

சில மணி நேரத்தில், அதிகளவு மழை பெய்ததற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து விளக்கமளிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மழையால் உடுமலை பகுதியில் கட்டிடங்கள் மற்றும் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பலருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க முதற்கட்டமாக நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் தண்ணீர் தேக்கமடைவதை தடுக்கும் வகையில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தற்போது பள்ளிகள்தோறும், சுத்தப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், நவம்பர் மாதம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. 

எனவே பள்ளி வளாகங்கள், புதர்கள் மற்றும் குப்பை இன்றி தூய்மையாக வைக்க வேண்டும். உடுமலை பகுதியில் தற்போது பருவ மழைப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இதனால் பள்ளிக் கட்டிடங்களின் மேற்பரப்பில் குப்பை இல்லாதவாறும் மழைநீர் வழிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News