செய்திகள்
கண்காணிப்பு கேமிராவில் பதிவான பயங்கரவாதிகளின் உருவம்.

சப்-இன்ஸ்பெக்டரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது எப்படி?- போலீசார் வெளியிட்ட முழு விவரம்

Published On 2020-01-10 06:47 GMT   |   Update On 2020-01-10 06:47 GMT
களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றிய முழு விவரங்களை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் 3 சோதனை சாவடிகள் உள்ளது.

களியக்காவிளை மார்க்கெட் ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சோதனை சாவடியின் அருகே வீடுகளும், கடைகளும் அடுத்தடுத்து உள்ளது. சோதனை சாவடியில் சந்தேகப்படும் வாகனங்களை போலீசார் தடுத்து சோதனை செய்யும் போது சில நேரம் வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் நடைபெறும். அப்போது அக்கம் பக்கத்தினர் சோதனை சாவடி முன்பு திரள்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவும், மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் துப்பாக்கி சத்தம் கேட்டுதான் மக்கள் அங்கு ஓடிச் சென்றுள்ளனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தப்படி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் களியக்காவிளை போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் வில்சனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வில்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சுட்ட நபர்கள், சோதனை சாவடிக்கு நடந்து வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

2 பேரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து வருகிறார்கள். ஒருவர் முகத்தை மூடிய படி கீழ் சட்டை பையில் கையை நுழைத்தப்படி இருந்தார். இன்னொருவர் குல்லா அணிந்திருந்தார். இருவரும் சாவகாசமாக நடந்து வில்சன் அருகே செல்கிறார்கள்.

திடீரென ஒருவர் கைத் துப்பாக்கியால் வில்சனை சுடுகிறார். இன்னொருவர் கத்தியால் வெட்டுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் இச்சம்பவங்கள் நடக்கிறது. சத்தம் கேட்டு மக்கள் வருவதை கண்டதும், பயங்கரவாதிகள் 2 பேரும் மீண்டும் சோதனை சாவடியை விட்டு வெளியேறி மார்க்கெட் சாலையில் நடக்கிறார்கள்.

சோதனை சாவடியில் இருந்து சுமார் 1 கிலோ மீட் டர் தொலைவில் கேரள எல்லை பகுதி உள்ளது. சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற பின்பு பயங்கரவாதிகள் இருவரும் கேரள எல்லை நோக்கி நடந்தே சென்றனர்.

1 கிலோ மீட்டர் நடந்து கேரள எல்லைக்குள் புகுந்துள்ளனர். அதன் பின்பு அவர்கள் மாயமாகி விட்டனர்.

கேரள எல்லையில் இருந்து மீண்டும் அவர்கள் குமரி மாவட்டம் வந்தார்களா? அல்லது கேரளாவிலேயே தலைமறைவாக உள்ளார்களா? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றிய முழு விவரங்களை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் ரகு பாலாஜி சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியை ஆய்வு செய்ய சென்றார். கோழிவிளை அருகே இரவு 9.20 மணிக்கு செல்லும்போது மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வில்சனை ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டதை கண்டார்.

பின்னர் அந்த நபர், வில்சனை சோதனை சாவடிக்கு வெளியே இழுத்து வந்தார். அங்கு அவரை மீண்டும் சரமாரியாக சுட்டார். இன்னொரு நபர் கத்தியால் வில்சனை வெட்டினார். மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது.

வில்சன் தாக்கப்படுவதை கண்டு சப்- இன்ஸ்பெக்டர் ரகு அவர்கள் அருகே சென்றுள்ளார். வில்சனை வெட்டுவதை தடுக்க முயன்றுள்ளார். சத்தம் போட்டுக் கொண்டே அருகில் செல்ல முயன்றதும், அந்த நபர்கள், அருகே வந்தால் துப்பாக்கியால் உன்னையும் சுட்டு விடுவேன் என்று மிரட்டினர்.

இந்த சத்தம் கேட்டு சோதனை சாவடிக்கு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே வில்சனை வெட்டிய  2 பேர் அருகே இருந்த ஜும்மா பள்ளிவாசல் பின்பகுதி வழியாக காம்பவுண்டுக்குள் சென்று விட்டனர்.

அவர்களை பிடிக்க சென்றபோது, வில்சன் உயிருக்கு போராடுவதை சப்- இன்ஸ்பெக்டர் ரகு பார்த்துள்ளார். அப்போது களியக்காவிளை இன்ஸ்பெக்டர் வாகனத்தில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் வில்சனை ஏற்றி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வில்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே வில்சன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம்.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News